புதுதில்லி;
பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், ஒரு தலித் என்பதாலேயே, அவர் கே.ஆர். நாராயணன் ஆகிவிட மாட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

ராம்நாத் கோவிந்த்தும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனும் ஒன்றல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:
பாஜகவின் தலித் ஆதரவு நிலைப்பாடு என்பதை தலித் மேம்பாட்டுக்கானதாக உணர முடியவில்லை. பெரும்பான்மையான தலித்துகள் நாடு தழுவிய அளவில் தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும், பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கிறார்கள் என்பதும் பாஜகவிற்கு ஒரு சவாலாக இருக்கிறது.

ஆகவே, பாஜகவின் செயல்திட்டம் தலித் மக்களை நோக்கியதாக இருக்கிறது. எதிர்பார்த்ததைப் போலவே தலித் ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
அவர் தலித் என்பதால் விசிக மகிழ்ச்சி அடைய ஒன்றுமில்லை.
பாஜக முதன் முதலாக இந்த முடிவை எடுத்ததாக சொல்ல முடியாது.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி கே.ஆர். நாராயணனை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்து 5 ஆண்டுகாலம் பதவி வகித்தார். அவரையும் பாஜக அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்த்தையும் சமமாக பார்க்க முடியாது.

இருவரும் தலித்துகளாக இருக்கலாம். அவர் காங்கிரஸ் கட்சி, இவர் பாஜகவை சேர்ந்தவர். ஆனால், கே.ஆர். நாராயணன் அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கியவர். ஆனால் ராம்நாத் கோவிந்த் அப்படிபட்டவர் அல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கச் சிந்தனையாளர். ஆகவே, இருவரின் சிந்தனைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள். பாஜக உள்நோக்கத்தோடு எதிர்க்கால செயல்திட்டங்களை நடைமுறை படுத்தும் வகையில் இந்த வேட்பாளரை அறிவித்துள்ளது.

ஆகவே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மிக கவனமாக இதை கையாள வேண்டும். புரட்சிகர ஜனநாயக சிந்தனையுள்ள தலித் ஒருவரை எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Leave A Reply