22 மொழிகளையும் மத்தியில் அலுவல் மொழிகளாக்குக

இந்தி திணிப்பின் மூல ஊற்று மத்திய அரசின் அலுவல் மொழி இந்தி என்று அரசியல் சாசனத்தில் பொறித்திருப்பது. அதற்குப் பதிலாக அதன் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழிகள் என்று ஆக்க வேண்டும். இது சாத்தியமா என்று கேட்கக் கூடும். சாத்தியமே இந்த கணினி யுகத்தில். இந்தியாவோடு ஒப்புநோக்கத்தக்கது ஐரோப்பிய ஒன்றியம். அதன்அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகள் 24 . அதன் பல செயல்பாடுகள் இத்தனை மொழிகளிலும் நடக்கின்றன. அதற்கான மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன. இதை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். 22 மொழிகள் பேசுவோரின் வரிப்பணத்தில் இயங்கும் இந்தியஅரசு அத்தனை மொழிகளிலும் இயங்குவதுதான் நியாயம். இந்தியில் மட்டுமே இயங்கும் என்பது இந்தியத் தாய் செய்யும் காரியம் அல்ல. பிற குழந்தைகளின் உணவையும் தன் குழந்தைக்கே தருகிற கொடுமைக்கார சித்தியின் வேலை. இல்லை, இந்த காலத்திலும் 22 மொழிகளை அலுவல் மொழிகளாக்குவதில் சிரமம் உண்டு என்றால் அவற்றுக்கு அரசியல்சாசன அந்தஸ்தைக் கொடுத்துவிட்டு, படிப்படியாக நடப்புக்கு
கொண்டு வரலாம். உதாரணமாக, 5 கோடி பேருக்கு மேல் பேசுகிறவர்களைக் கொண்ட மொழிகள் இந்தி, வங்காளி, தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது எனும் 6 மொழிகள். முதல் கட்டமாக, இவற்றுக்கு நாடாளுமன்றத்திலும் இதர இடங்களிலும் உடனுக்குடன் மொழிபெயர்ப்பு ஏற்பாடுகளை உருவாக்கலாம். 1 கோடிக்கு மேல் பேசுகிறவர்களைக் கொண்ட மொழிகள் குஜராத்தி, கன்னடா, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, அஸ்ஸாமி, மைதிலி எனும் 7 மொழிகள். இரண்டாம் கட்டமாக இந்த மொழிகளுக்கு அந்தஏற்பாடுகள். மூன்றாம் கட்டமாக இதர 9 மொழிகளுக்கு அந்தஏற்பாடுகள். இடைக்காலத்தில் ஆங்கிலம் கூடதல் அலுவல் மொழியாக இயங்கும். இப்படியாக இந்தியாவின் மொழிப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். மனமிருந்தால் நிச்சயம் மார்க்கம் உண்டு. பிரச்னை என்னவென்றால் ஆட்சியாளர்களுக்கு நியாய மனம் இல்லை என்பதுதான். அவர்கள் தமிழ் உள்ளிட்ட. பிற மொழிகளின் தலையில் கைவைத்து இந்தி ஆதிக்கத்தை கொண்டுவரப் பார்க்கிறார்கள். இதன் பக்கவிளைவு என்னவெனறால் இந்தி பேசாதவர்கள் ஆங்கிலத்தின் தயவை நாடும் போக்கு அதிகரித்தது. அதனால் இந்திய மொழிகளின்வளர்ச்சி தேங்கிப்போனது.

-Ramalingam Kathiresan

Leave A Reply