பாண்டி நகரமாம் மதுரைக்கு கிழக்கே
பசுமையானதொரு ஊரு – அதுக்கு
கீழடி என்றே பேரு – அந்த
தாய்மடிக்குள்ளே புதைந்து கிடக்குது
தமிழர்களின் வரலாறு – ஆதி
தமிழர்களின் வரலாறு.

தமிழருக்கென்றே வரலாறு இல்லையென
சொல்லி வந்தார்கள் பலரும் – அதை
ஆமோதித்தார்கள் சிலரும் – அந்த
அவச்சொல்லை நீக்க பழியதை போக்க
கீழடிக்குள்ளே மலரும் – புதிய
வரலாறு அங்கே மலரும்.
( பாண்டி…)

ரெண்டு ஆயிரம் ஆண்டுக்கு முன்னே
சங்கப் பாட்டுக்கள் இருக்கு – அதில்
ஆயிரம் தரவுகள் இருக்கு – ஆனால்
கவிதைகள் எல்லாம் தரவுகள் அல்ல
என்று சொன்னாரே கிறுக்கு – அதுக்கு
பதிலும் கீழடியில் இருக்கு..
( பாண்டி…)

கீழடி மண்ணில் தோண்டத்தோண்ட
உயர்ந்தது தமிழரின் மிடுக்கு – அது
ஆயிரங்காலத்து செறுக்கு – அந்த
உண்மையை கண்டு கத்துது கதறுது
காவிக்கூட்டத்தை விரட்டு – நம்ம
கீழடியை சொல்லி துரத்து..
( பாண்டி )

கீழடி மண்ணில் கிடைத்த பொருட்களை
அமெரிக்காவுக்கு அனுப்பி – அதை
ஆய்வு செய்தார்கள் நுணுக்கி – அந்த
ஆய்வில் கிடைத்த உண்மையைக் கண்டு
காவிக்கூட்டம் பதறும் – நம்
வரலாறு கண்டே அலறும்..
( பாண்டி )

பெத்லகேமிலே ஏசு பிறப்பதற்கு
இருநூறு ஆண்டுகள் முன்னே – தமிழன்
கீழடியில் வாழ்ந்தான் அண்ணே – அங்கு
சாதியும் இல்லை மதமும் இல்லை
சமமாய் வாழ்ந்ததை கண்டோம் – அதை
தமிழர் வாழ்வென கொண்டோம்.
( பாண்டி )

சிந்து சமவெளி நாகரீகம் போல்
இங்கும் இருப்பதை கண்டு – காவி
கூட்டம் நிக்குது மிரண்டு – அந்த
ஆய்வை முடக்க உண்மையை மறைக்க
போடுறாங்கண்ணே சட்டம் – அதை
முறியடிப்பதே நம்திட்டம்
( பாண்டி )
வைகை நதியின் மடியில் உறங்கும்
கீழடி மண்ணை எடுப்போம் – அதை
தமிழகமெங்கும் விதைப்போம் -இது
தமிழரின் உரிமை என்றே முழங்கி
மனித மனங்களை சமைப்போம்- புது
வரலாறுகளை படைப்போம்…

-கருப்பு கருணா

Leave A Reply