மதுராந்தகம்,
சாதி ஆணவப் படுகொலையை தடுக்கக்கோரி நடைபெற்றுவரும் நடைபயணம் சென்னைக்குள் நுழைய காவல்துறை  அனுமதி மறுத்தாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம் என ததீஒமு மாநில பொதுச்செயலாளர் கோ.சாமுவேல்ராஜ் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திற்கு வந்தடைந்த  பிரச்சார பயண குழுவினருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள்  சிஐடியு, வாலிபர் சங்கம்,  மாதர் சங்கம், சுமைப்பணி தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில்  எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் சாமுவேல்ராஜ் பேசியதாவது:
வடமாவட்டங்களில் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தலித் மக்களின் குடிசைகளை தீயிட்டு கொளுத்தும் நிலை உருவாகியுள்ளது.  கொங்கு மண்டலத்தில் ஈஸ்வரன், மணிகண்டன்,  போன்றோர் அவர்களின் சாதிப் பெண்களை பத்தாம் வகுப்பிற்கு மேல்  படிக்க வைக்க வேண்டாம் என்றும் திருமணம் செய்து வையுங்கள் என்றும் பகிரங்கமாக பேசிவருகிறார்கள்.  அவ்வாறு நடந்தால் அந்த சாதியில் பத்தாண்டுகளுக்கு பின்னர் பெண்கள் பின்னுக்கு தள்ளப்படுவார்கள். தன்னுடைய சாதியைச் சார்ந்த பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் இவர்கள் பேசுவது சட்டப்படி குற்றம். எனவே அவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அறிவுசார் மக்களை உருவாக்கவும் பகுத்தறிவாதிகளை உருவாகவும் தந்தை பெரியார்  பாடுபட்டார். தமிழகத்தில் பெரியாரின் பேரன்கள் என்று கூறிக்கொண்டு ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகள் ஆணவப் படுகொலைகளை தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி சேலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை சந்தித்து நடைபயணமாக சென்னை நோக்கி செல்கிறோம்.

இந்நிலையில் இந்த நடைபயணம் சென்னைக்குள் நுழைவதற்கு  தடைவிதித்திருப்பதாக சென்னை மாநகர காவல் துறை கூறியுள்ளது.  மக்களை பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு சென்னையில் பேரணி நடத்த அனுமதி வழங்கும் காவல்துறை.  நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுபவர்களுக்கு தடைவிதித்தால் வரும் 22 ஆம் தேதி தடையை மீறி நடைபயணம் நடைபெறும்.  இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள்  பங்கேற்க உள்ளனர். எனவே நடைபயண நிறைவு நிகழ்ச்சியில் பொதுமக்களும், சமூக சிந்தனையாளர்களும், சாதி மறுப்பு அமைப்பினரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

படம் சாமுவேல் ராஜ்

Leave A Reply