திருப்பூர், ஜூன் 19 –
திருப்பூர் பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையம் பகுதியில் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு செய்யும் தார் கலவை தொழிற்சாலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் திங்களன்று மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் மனு அளித்தனர். இதில், பிஏபி மங்கலம்கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் பொன்னுசாமி அளித்த மனுவில், திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் வண்டல் மண் எடுக்க ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம் போன்ற கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் வண்டல் மண் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

எனவே குளத்தில் 10,000 கனமீட்டர் அளவு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சூழலை கேடாக்கும் தார் தொழிற்சாலை மொய்யாண்டம்பாளையம் கிராம மக்கள் அளித்தமனுவில், இங்குள்ள துணை மின்நிலையம் அருகில் சுற்றுச்சூழல் பாதிக்கும் படி பெரிய அளவில் தனியார் தார் கலவை தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட எந்த அரசுத் துறையிலும் அவர்கள் அனுமதி பெறவில்லை. கரும்புகையுடன் சூழல் மாசு ஏற்படுவது பற்றி அங்கு சென்று பொதுமக்கள் கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கின்றனர். எனவே அந்த தனியார் தொழிற்சாலையை ஆய்வு செய்து திறப்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது.

குடிநீர் பிரச்சனைகள்:
தாராபுரம் வட்டம், தளவாய்பட்டினம் ஊராட்சி ஊத்துப்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் 500-க்கும்மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 மாத காலமாக எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. ஆழ்குழாய் அமைத்தும்தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் ஒரு குடம் நீரை ரூ.5-க்கு வாங்க வேண்டியுள்ளது. ஆகவேகுடிநீர் வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாநகராட்சி 36-வதுவார்டு மக்கள் அளித்த மனுவில், திருப்பூர் வெள்ளிவிழா நகர், தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை 45 நிமிடம் தான் குடிநீர் வருகிறது. ஆகவே குடிநீர் தேவையை கணக்கில் கொண்டு சிரமத்தைப் போக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். திருப்பூர் கொங்கு பிரதான சாலை இ.ஆர்.பி. நகர் மக்கள் அளித்த மனுவில், இப்பகுதியில் கடந்த 6 மாத காலமாக தனியார் பாலித்தின் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆகவே தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்றனர்.

மதுக்கடை அகற்றக்கோரி:
திருப்பூர் மாநகராட்சி 43-வது வார்டு புதுக்காடு பகுதியில் கடை எண் 1911 அரசு மதுபானக்கடை, மதுபானக்கூடத்துடன் செயல்படுகிறது. அரசு நடுநிலைப் பள்ளி அருகில் இருப்பதுடன், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் கடை மற்றும் மதுபானக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதேபோல், திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டு பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதிபூங்காநகர், வஞ்சிநகர், திருக்கு மரன் நகர் மற்றும் சபரிநகர் மக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. வீரபாண்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிக்கும் இந்த கடை அமைந்துள்ள பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பும்போது குழந்தைகளை குடிபோதையில் பலர் கிண்டல், கேலி செய்வதுடன் தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆகவே குழந்தைகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்
மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சாலை வசதி கோரி மனு
தெற்கு அவிநாசிபாளையம் சின்ன வேலாயுதம்பாளையம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடும்பங்கள் வசிக்கின்றன. எனினும் தார் சாலை வசதி இல்லை. ஏற்கெனவே இருந்த பாதையை அங்கிருக்கும் தனியார் ஆக்கிரமித்த நிலையில் அந்த பாதையில் செல்லும் தலித் மக்களை சாதியைச்சொல்லி திட்டி அவமானப்படுத்துகின்றார். இதை தவிர்க்க 6 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே முறையான சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

பொங்கலூர் ஊராட்சி மஞ்சப்பூர் ராஜீவ்நகர் பகுதி சாலையில் பனியன் கம்பெனி வாகனங்களும், பால் வண்டிகளும் அசுர வேகத்தில் செல்வதால் குழந்தைகள், பெண்கள், முதியோருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைத்து அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்றனர். வெள்ளகோவில் 13-வது வார்டில் மட்டுமே குடிநீர் குழாய் உள்ளது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த நாகமநாயக்கன்பட்டி, தாசவநாயக்கன்பட்டி, சேரன்நகர், பச்சாகவுண்டன் வலசு,அரியாண்டி வலசு, உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாடுகாரணமாக அங்கு சென்றுபிடித்தோம்.

இந்நிலையில் அப்பகுதியினர் குடிநீர்குழாய்க்கு பூட்டு போட்டு பூட்டி விட்டனர். ஆகவே மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என பாலசுப்பிரமணியம் என்பவர் கோரிக்கை மனு அளித்தார்.

Leave A Reply