பாட்னா,
பீகாரில் தனியார் பள்ளி ஒன்றில் சீருடைக்கு கட்டணம் செலுத்தாததால் மாணவிகளின் ஆடைகளை பள்ளி நிர்வாகமே களைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் சிக்ராலா கிராமத்தில் பி.ஆர். எஜூகேஷன் அகாடமிஎன்ற தனியார் பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்தப் பள்ளி தனது பள்ளி மாணவர்களுக்குக் கட்டண அடிப்படையில் சீருடை வழங்கி இருக்கிறது. இரண்டு மாணவிகள் சீருடைக்குப் பணம் செலுத்தாததால் அவர்களின் உடைகளைக் கழற்றி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது பள்ளி நிர்வாகம். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (16.06.2017) நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் சகோதரிகள். ஒரு மாணவி முதல் வகுப்பிலும், மற்றொரு மாணவி இரண்டாம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். இவர்களது தந்தை சாஞ்சன் சாஹ் வெள்ளிக்கிழமை மகள்களை அழைக்க பள்ளிக்குச் சென்றிருக்கிறார். வகுப்பு ஆசிரியையோ, உடனடியாகச் சீருடைக்கான பணத்தைச் செலுத்திவிட்டு மகள்களை அழைத்துச் செல்லும்படி சொல்லியிருக்கிறார். சாஹ் இரண்டு பெண் குழந்தைகளின் சீருடைக்கான பணம் செலுத்துவதற்கு கொஞ்சக் காலம் அவகாசம் கேட்டார். ஆனால், அவரது கண் முன்னாலேயே, அனைத்து ஆசிரியர்களுக்கும் மத்தியில் இரண்டு பெண் குழந்தைகளின் ஆடைகளையும் களைந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாஹ், காவல் நிலையத்தை நாடியிருக்கிறார். இதையடுத்து காவல்துறை பள்ளியின் மீது வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. ‘இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் பள்ளியின் முதல்வரையும், வகுப்பு ஆசிரியையும் கைது செய்து இருக்கிறோம்’ காவல் துறை அதிகாரி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். மாநில கல்வி அமைச்சர் அஷோக் சௌத்ரி ‘இந்தச் சம்பவத்தை உடனடியாக விசாரித்து பள்ளியின் மீதும், சம்பந்தப்பட்டவர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி இருக்கிறார்.

Leave A Reply