கோவை, ஜூன் 18-
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக முன்னணியின் மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் மீது கடந்த ஜூன் 17ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், அலுவலக ஜன்னல் ஆகியவை சேதமடைந்தன. உண்மையில், இத்தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது மட்டும் அல்ல. கோவையின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை மீது வீசப்பட்டது.

தொழில் நகரமான கோவையின் வளர்ச்சியின் மீது வீசப்பட்டது. மேலும் அடுத்து நடைபெற இருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை மனதில் வைத்து நீண்ட நெடிய திட்டத்துடன் வீசப்பட்ட குண்டு ஆகும். இதனை கோழைத்தனமான தாக்குதல் என்று கூற முடியாது. திட்டமிட்டபடி அடுத்து நடைபெற இருக்கும் கலவர முயற்சிகளின் முன் தயாரிப்பே இந்த சம்பவம். இதனை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply