சென்னை;
தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்து நிலக்கோட்டை தொகுதி உறுப்பினர் தங்கதுரை கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சிலர் துணைக் கேள்விகளை எழுப்பினர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். அப்போது துணைக் கேள்வி எழுப்ப ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக உறுப்பினர் தங்க.தமிழ்ச் செல்வன் அனுமதி கோரினார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். இதைத் தொடர்ந்து சிறிது நேரம் பேரவைத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, பேரவைத் தலைவர் விளக்கம் கொடுத்தார்.அதற்குள் தங்க தமிழ்ச் செல்வன் அவையில் இருந்து வெளியேறினார்.

கேள்வி நேரத்தில் ஆளும் கட்சி உறுப்பினருக்கே பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட தர்மத்துப்பட்டி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளைக் கடந்தும் அதற்கான கட்டடப்பணிகள் தொடங்கப்படவில்லை. இது குறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பேரவைத் தலைவரிடம் அனுமதிகேட்டேன் அனுமதிக்கவில்லை. தொகுதி மக்களின் சார்பில் எனது எதிர்ப்பை தெரிவிக்க சபையில் இருந்து வெளியேறினேன்” என்றார் அவர்.

தங்க. தமிழ்ச்செல்வன் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அதிமுக-வில் நிலவும் உட்கட்சிப் பூசல் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது

Leave A Reply