திருப்பூர், ஜூன் 18 –
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மக்களை நோக்கிய பயணம் என்ற அடிப்படையில் குண்டடம் வட்டாரம் சடையபாளையம் ஊராட்சியில் உள்ள கிழக்கு சடையபாளையம் குளத்தை தூர்வாரினர்.

\மே மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்த சங்கத்தின் மாநில மாநாட்டில் மக்களை நோக்கிய பயணமாக இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் குளம் குட்டைகளைத் தூர்வாரி மழைநீரை சேகரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கிழக்கு சடயபாளையம் குளத்தை சனிக்கிழமை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்விற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஞானசேகரன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை துணை இயக்குநர் கி.ரமேஷ்குமார் இப்பணியைத் தொடக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ச.முருகதாஸ், ஓய்வுபெற்ற அரசுத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் க.சண்முகம் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ரமேஷ், மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, இயந்திரங்கள் உதவியுடன் சடையபாளையம் குளத்தைத் தூர்வாரினர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் டி.சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

Leave A Reply