சென்னை.
அடிப்படை வசதி மற்றும் ஊதிய உயர்வு கேட்டு      சென்னை பெட்ரோலிய கார்பரேசன் நிறுவன ஒப்பந்த உரிமையாளர்கள், தொழிலாளர்கள் திங்களன்று (ஜூன் 19) மணலியில் உள்ள சிபிசிஎல் ஆலையில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வரும்  சிபிசிஎல் நிறுவனம் இந்தியாவிலேயே பெரிய தொழிற்சாலைகளில் ஒன்று. இதில் பல்லாயிரக்கணக்கான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் மூலம்   120 ஒப்பந்ததாரர்கள், சுமார் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள்  பணிசெய்து வருகின்றனர்.  நிரந்தர தொழிலாளர்களுக்கும் ஒப்பந்த தொழிலாளர் களுக்குமான ஊதிய வேறுபாடுஉள்ளது.  கடந்த 19.01.2017 அன்று மத்திய அரசு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 40 விழுக்காடு ஊதியம் உயர்த்தி வழங்கவேண்டுமென உத்திரவிட்டுள்ளது. இதனால் ஒருநாள் கூலி ரூ 375 பெற்றுவந்த தொழிலாளி ரூ 536 பெறவேண்டி உள்ளது. ஆனால் சிபிசிஎல் நிர்வாகம் அந்த ஊதியத்தை உயர்தி வழங்கவில்லை.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணலி-சேக்காடு பகுதிசெயலாளர் இரா.இராஜவர்மன் கூறுகையில், ஒப்பந்த தொழிலாளர்கள் அடிப்படைவசதியின்றி உள்ளனர். ஆண், பெண் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, கேண்டீன் வசதி இல்லை. வேலையின் நிமித்தமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல ஒப்பந்தப் பணியாளர்களுக்கு வாகன வசதியும் செய்துதரப்படுவதில்லை. இதனால் பல கிலோமீட்டர் தூரம்  நடந்தே செல்லவேண்டி உள்ளது. இது மனித உரிமை மீறல்  என்று கூறிய இராஜவர்மன் இந்நிலை நீடிக்குமேயானால் நிர்வாகம் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கும் என்று எச்சரித்தார்.

Leave A Reply