திருப்பூர், ஜூன் 19 –
திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலில் குடும்பப் பெண்கள் ஈடுபடும் தொழிலாக ஜாப் ஒர்க் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி.) ரத்து செய்யுமாறு திருப்பூர் பனியன் தையல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் செயலாளர் கே.எஸ்.முருகேசன் திங்களன்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் சிறிய அளவு அறையில் உள்நாட்டு பனியன் உற்பத்திக்குரிய பனியன் துணியை வெட்டி தையல் நிலைய உரிமையாளர்களிடம் கூலிக்கு தைக்க கொடுக்கின்றனர். அதற்கு கூலி மட்டுமே கிடைக்கிறது. இதில் குடும்பச் செலவுக்கு மட்டுமே வருமானம் கிடைக்கிறது.

இந்நிலையில் முதலில் நிர்ணயிக்கப்பட்ட 18 சதவிகித சரக்கு சேவை வரியை பின்னர் 5 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தையல் உரிமையாளர்களால் தர இயலாது. அதேபோல் ஸ்டீம் கேலண்டர், பிரிண்டிங், காஜா பட்டன், செக்கிங் சென்டர், அயரன், பேக்கிங், ஸ்டீம் துணி அறவை ஆகியோரும் பாதிப்பில் உள்ளனர். எனவே இந்த வரியை மறுபரிசீலனை செய்து அதை திரும்பப் பெற வேண்டும் என துணி முதல் ஆடை வரை உள்ள அனைத்து ஜாப் ஒர்க் நிறுவனங்கள் சார்பாக கேட்டுக் கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply