புதுதில்லி;
பாஜக-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் (71) அறிவிக்கப்பட்டுள்ளார்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், பாஜக தன்னிச்சையாக ராம்நாத் கோவிந்த் பெயரை, வேட்பாளரை அறிவித்துள்ளது.

இது, எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை, எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து பாஜக அறிவிக்கும் என்று அமித் ஷா முன்னர் கூறியிருந்தார். எல்லோரும் ஏற்கக் கூடிய ஒரு பொதுவேட்பாளர் என்ற நிலையை எட்டுவதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் மட்டும் வைத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதால், இத்தகைய சமரச முயற்சிக்கு பாஜக            இறங்கி வந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அதேபோல சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோரை, பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கடந்த வாரம் சந்தித்தனர்.

எனினும், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக யாரை நிறுத்த விரும்புகிறது என்ற எந்த தகவலையும் அப்போது அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு போல, அது இருந்ததே தவிர, வேட்பாளர் பெயரை அறிவித்து, ஆலோசனை எதையும் பாஜக தலைவர்கள் நடத்தவில்லை.

இதை அப்போதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவது போல, ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான நாடகமாகவே பாஜக-வினர் இந்த சந்திப்பை நடத்துவதாக தெரிகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, ஜூன் 23-ஆம் தேதிக்குள் ஆக்கப்பூர்வமாக எந்த முயற்சியும் எடுக்காவிட்டால் எதிர்க்கட்சிகள் சார்பில் தனியாக வேட்பாளர் நிறுத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்று சீத்தாராம் யெச்சூரி கூறியிருந்தார்.

இந்நிலையில், திங்களன்று பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இக்கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது.
அதன்முடிவில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக தலைவர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக, தற்போதைய பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எதிர்க்கட்சிகளின் பல தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியே ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறிய அமித் ஷா, பாஜக-வின் வேட்பாளர் தேர்வு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் ராம்நாத் கோவிந்த்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஜூன் 23-ம் தேதி ராம்நாத் கோவிந்த் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

‘ஒருமித்த கருத்தை ஏற்படுத்த பாஜக தவறி விட்டது’ 
குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு;
இதனிடையே குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த விஷயத்தில், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்ட பாஜக தவறிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை பாஜக தலைவர்கள் சந்தித்த போது கூட, யார் வேட்பாளர் என்பதை தெரிவிக்காமல்தான் பேசி விட்டுச் சென்றனர் என்றும் மீண்டும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாஜக வேட்பாளர் அறிவிப்புக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்;
மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க, ஜூன் 22-ஆம் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட முககிய எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன.இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட ராம்நாத் கோவிந்த்;
குடியரசுத் தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் பின்புலத்தைக் கொண்டவர். பாஜக-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர்.

1945-ஆம் ஆண்டு, அக்டோபர் 1-ஆம் தேதி தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த இவர், கான்பூர் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டமும் (பி.காம்), எல்.எல்.பி பட்டமும் பெற்றவர்.
1971-ல் தில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தம்மைப் பதிவு செய்து கொண்ட ராம்நாத் கோவிந்த், 1977 ஆம் ஆண்டு முதல் 1979 வரை தில்லி உயர் நீதிமன்றத்திலும், 1980 முதல் 1993 வரை உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றினார்.

1974-ஆம் ஆண்டு சவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகனும், ஸ்வாதி என்ற மகளும் உள்ளனர்.

மொத்தம் 16 ஆண்டுகள் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்ட பின்னர், 1994-ம் ஆண்டு நேரடி அரசியலில் நுழைந்தார். 1994-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

2 முறை இப்பதவியில் இருந்த ராம்நாத், இந்த காலத்தில், தாழ்த்தப்பட்டோர் -பழங்குடியினருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, சமூக நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, உள்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சட்டம் – நீதி அமைப்பு ஆகியவற்றுக்கான நிலைக்குழுக்களில் உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார்.

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் ஆளுநர் குழுவின் உறுப்பினராகவும் கோவிந்த் இருந்துள்ளார். இந்த வகையில் பல நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவையில், இந்திய அரசின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதன்பின்னர், 2015-ஆண்டு பீகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வந்தார். இந்நிலையில், தற்போது பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply