சேலம், ஜூன் 19-
இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததைத் கண்டித்து சேலத்தில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜாகீரெட்டிப்பட்டி, மாமாங்கம் ஆகிய பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் மேட்டூர் குடிநீர் கடந்த இரு மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் திங்களன்று சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இரண்டு புறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அனைவருக்கும் உடனடியாக குடிநீர் கிடைக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு சில நாட்களில் முறையாக குடிநீர் கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கபப்டும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Leave A Reply