காந்திநகர் ,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் சேமிப்பு கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாஹிபாக் பழைய சர்க்யூட் ஹவுஸில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி ஸ்மிருதி காந்த். 28 அறைகள் கொண்ட இந்த சர்க்யூட் ஹவுஸின் ஒரு அறையில் , 95 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. மார்ச் 18 , 1922 அன்று இந்த நீதிமன்றம் மகாத்மா காந்திக்கு தேசதுரோக வழக்கில்  6 வருடம் சிறை தண்டனை விதித்தது. இந்திய சுதந்திரத்திற்கு பின் , இந்த அறை மகாத்மா காந்தி ஸ்மிருதி காந்த் (நினைவு இல்லம்) ஆக மாற்றப்பட்டது. மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் , ஓவியங்கள் , கோப்புகள் , ஆவணங்கள் இந்த அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த மே 25 ஆம் தேதி முதல் ஸ்மிருதி காந்த்-தில் உள்ள 28 அறைகளில் 18 அறைகள் பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. நீதிமன்றமாக செயல்பட்டு வந்த அறையில் இருந்த காந்தியின் கோப்புகள் , ஆவணங்கள் அனைத்தும் அறையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டு , தற்போது பதஞ்சலி நிறுவனத்தின் நெய் , பாதகைகள் , விரிப்புகள் , துண்டு பிரசுரங்கள் , யோகா தின பிரசாரத்தின் போது அணியும் உடைகள் என நிரப்பப்பட்டு சேமிப்பு கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. மற்ற அறைகளில் யோகா தின பிரசாரம் செய்யும் பதஞ்சலி நிறுவன ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து அகமதாபாத்தில் உள்ள அனைத்து சர்க்யூட் ஹவுஸ் பொறுப்பாளரும் , ஷாஹிபாக் துணைப்-பிரிவு துணை நிர்வாக பொறியாளருமான சிராங் பட்டேல் , ஸ்மிருதி காந்தை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு யார் அனுமதி வழங்கினார்கள் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல் , பதஞ்சலி நிறுவனம் ஸ்மிருதி காந்தை பயன்படுத்துவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

சர்க்யூட் ஹவுஸ் வட்டாரங்கள் கூறுகையில் , அமைச்சர்கள் , அரசு ஊழியர்கள் , அரச விருதினர்கள் மட்டுமே சர்க்யூட் ஹவுஸை இலவசமாக பயன்படுத்த அனுமதியுள்ளது. அமைச்சர்கள் அல்லது அதிகாரிகளின் உறவினர்கள் யாரேனும் இங்கு தங்க வேண்டும் என்றால் நாள் ஒன்றிற்கு ரூ.1,300 செலுத்த வேண்டும். மாநில அரசு முடிவு எடுத்த பின்னர் தான் பதஞ்சலி நிறுவனம் சர்க்யூட் ஹவுஸை பயன்படுத்தியதற்கான தொகை வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Leave A Reply