—–மதுக்கூர் இராமலிங்கம்—-
மகாபாரத போர்க்களத்தில் பார்த்தனின் அம்புப் படுக்கையின் மீது பீஷ்மர் வீழ்த்தப்பட்டது போல, இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் மீது மத்திய பாஜக கூட்டணி அரசு தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்தியாவின் பெருமையாக விளங்கக்கூடிய பன்முகப் பண்பாட்டை சிதைக்கும் முறையில், குறுகிய இந்துத்துவா அடிப்படையிலான ஒற்றை பண்பாட்டை திணிக்கும் முயற்சி பல முனைகளில் நடந்து வருகிறது. மொழி, உணவு, உடை, உணர்வு என பல்வேறு மாநில மக்களின் மீது ஒரு யுத்தமே தொடுக்கப்படுகிறது.

ஒற்றை கலாச்சார திணிப்புக்கு எதிராகவும், பன்முக பண்பாட்டை பாதுகாக்கவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி திங்களன்று சென்னையில் தமிழர் உரிமை மாநாட்டினை நடத்திட உள்ளது.

இந்தித் திணிப்பை எதிர்த்தும், கீழடி அகழ்வாய்வை இடையூறு ஏதுமின்றி தொடர்ந்து நடத்திட வலியுறுத்தியும் தமிழர் உரிமை மாநாடு நடைபெறவுள்ளது.சென்னை ராஜதானி என்று அழைக்கப்படுவதை மாற்றி தமிழ்நாடு என பெயரிடக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த விடுதலை போராட்ட வீரர், தியாகி சங்கரலிங்கனார் நினைவாகவும், மொழி போரில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவாகவும் ஜோதிகள் எடுத்து வரப்படுகின்றன.

சிந்து சமவெளி நாகரிகத்திற்கு நிகரான கீழடியிலிருந்து பிடிமண் சென்னைக்கு எடுத்து வரப்படுகிறது. பிடிமண் எடுக்கும் முயற்சி செவ்வாயன்று கீழடியில் நடைபெறுகிறது. அடுத்தடுத்து தியாக ஜோதிகள் தமிழ்கூறும் நல்லுலகில் திசைகள் அதிர புறப்பட இருக்கின்றன.

பன்முக பண்பாட்டை சிதைக்கும் முயலும் பாசிச சக்திகளை கருத்துக் களத்தில் எதிர்கொள்ள படைப்பாளிகள், பண்பாட்டு போராளிகளின் பெரும் படை வெட்சிப் பூ சூடி வெஞ்சினம் கூறி புறப்படுகிற தயார் நிலையில் உள்ள செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து பொருளாதார தளத்தில் மக்கள் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என சமூகத்தின் அனைத்து பகுதியினரும் வஞ்சிக்கப்படுகின்றனர்.

நாளுக்குநாள் இந்தியர்களின் வாழ்க்கை நலிந்து கொண்டே போகிறது. மறுபுறத்தில் கார்ப்பரேட் கனவான்களின் மூலதனம் வீங்கி வீங்கி வெடிக்கும் நிலைக்கே செல்கிறது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையை அதிநவீனமான முறையில் திணிக்கிறது மோடி அரசு. டிஜிட்டல் என்கிற பெயரில் மக்களின் கண்களிலிருந்து காசுபணம் மறைக்கப்படுகிறது.

மறுபுறத்தில் பாஜக என்ற அரசியல் கட்சியை உண்மையில் இயக்கிக்கொண்டிருக்கிற ராஷ்டிரிய சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் நிகழ்ச்சி நிரலை திணிப்பதில் மோடி அரசு முனைப்பு காட்டுகிறது. வரலாற்றின் ஆரக்கால்களை பின்னோக்கித் தள்ளி பகுத்தறிவுக்கு பொருந்தாத மூட நம்பிக்கைகளை முன்னிறுத்தி, கட்டுக்கதைகளுக்கு வரலாறு என்று பெயர்சூட்டி இந்தியாவை பழைய கற்காலத்தை நோக்கி தள்ளிக் கொண்டு செல்கிறார்கள்.

இந்து, இந்தி, இந்துஸ்தானம் என்பதுதான் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல். தேவ பாஷை என்று கூறி வர்ணாசிரம அநீதியால் மக்களிடமிருந்து வழக்கொழிந்து போன சமஸ்கிருத மொழியை திணிக்க ஒருபுறம் இந்துத்துவாவாதிகள் முயல்கிறார்கள். மறுபுறத்தில் தேசிய பாஷை என்று கூறி இந்தி மொழி பேசாத மக்கள் மீது இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க முயல்கிறார்கள்.

ஒரு மொழியின் அடிப்படையில்தான் தேசியம் கட்டமைப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வரலாற்றின் வழித்தடத்தில் அப்படி அமையவும் இல்லை. அதேபோல ஒரு மதம், ஒரு இனம் என்ற அடையாளங்களுடன் மட்டும்தான் தேசியம் அமைய வேண்டும் என்பதும் இல்லை. இன்றைய இந்தியா பன்முக தேசியத்தை அடிப்படையாக கொண்டது.

பல்வேறு தேசிய இன மக்கள் வாழ்கிற, பல்வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்ட மக்கள் ஒருங்கிணைந்து, இயல்பான இயைபுடன் வாழ்கிற, பல்வேறு மதங்களை பின்பற்றுகிற மக்களைகொண்ட பரந்து விரிந்த நாடாக இந்தியா திகழ்கிறது. இது இந்தியாவின் உன்னதங்களில் ஒன்று.

ஆனால் இதை சிதைத்து கலாச்சார தேசியம் என்கிற பெயரில் ஒற்றை தேசியத்தை திணிக்க முயல்கின்றனர் மதவெறியாளர்கள். விடுதலைப் போராட்ட காலத்திற்கு முன்பே இந்தி பேசாத மக்கள் மீது அதை வம்படியாக திணிக்க முயற்சிகள் துவங்கிவிட்டன. இதுவரை தமிழகம் மூன்று மொழிப்போர்களை முன்னெடுத்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தில் 8 வது அட்டவணையில் 22 மொழிகள் தேசிய மொழிகள் என்றும் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 25 சதவீதம் பேர் மட்டுமே இந்தியை தங்கள் தாய்மொழி என்று குறிப்பிட்டுள்ளனர். போஜ்புரி, மகாதி, மைதிலி, கார்வாலி, தோக்ரி, ராஜஸ்தானி, மார்வாடி, ஹரியான்வி என கலப்பு இந்தியை பேசுபவர்களையெல்லாம் சேர்த்தால்தான் ஒட்டுமொத்தமாக இந்தி பேசுவோர் எண்ணிக்கை 45 விழுக்காடாக உயர்கிறது. அப்படிப்பார்த்தாலும் இந்தி பேசாத மக்கள் 55சதவீதம் உள்ளனர்.

இந்தியாவில் 8.5 கோடி பேர் வங்க மொழியையும், 7.5 கோடி பேர் தெலுங்குமொழியையும், 7 கோடி பேர் மராத்தியை, 6 கோடி பேர் தமிழ்மொழியையும், 5 கோடி பேர் உருதுமொழியையும், 4.6கோடி பேர் குஜராத்தி மொழியையும், 4 கோடி பேர் கன்னடத்தையும், 3.5 கோடி பேர் மலையாளத்தையும், 3.3 கோடி பேர் ஒரிய மொழியையும், 3 கோடி பேர் காஷ்மீரியையும் தங்களது தாய்மொழி என்று கூறியுள்ளனர்.

இதுதவிர வடகிழக்கு மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு கிளை மொழிகள் பேசப்படுகின்றன. பழங்குடி மக்கள் பேசுகிற மொழி பல நூறு இருக்கும். இத்தனை மொழி பேசுகிற மக்களும் இணைந்து வாழ்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் சிறப்பு. இன்னும் சொல்லப்போனால் தனது தாய்மொழியை பேசுகிற ஒரே ஒரு இந்தியன் மிஞ்சி இருந்தாலும் கூட அவரது உரிமை, உணர்வு பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆனால் கிலோமீட்டர் துவங்கி கல்வி நிலையங்கள் வரை, நாடாளுமன்றம் துவங்கி சமூகவலைதளம் வரை வம்மடியாக இந்தி மொழியை திணிக்க முயல்கிறார்கள். தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிப்பது சாத்தியமான ஒன்றே.
மொழி திணிப்பு என்பது இந்திய ஒற்றுமையை சிதைக்கவே பயன்படும் என்பதை அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள். ஏனெனில் அவர்கள் வெறுப்பை விதைத்தே பழக்கப்பட்டவர்கள்.

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழே தலைமை தாங்க வேண்டும் என்பதையும் இந்த மாநாடு அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது. இந்தி திணிப்புக்கு மாற்று ஆங்கிலத்திணிப்பு அல்ல. மாறாக எந்த திணிப்பும் இல்லாமல் இந்திய மக்கள் அனைவரது தாய்மொழி அனைத்திற்கும் சமமான வாய்ப்பும்,மரியாதையையும் வழங்கப்பட வேண்டும்.

புதிய கல்விக்கொள்ளை, நீட் தேர்வு போன்ற முடிவுகளும் தாய்மொழி வழிக்கல்விக்கு பாடைக்கட்டுவதாக அமைந்துள்ளது. துவக்கக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை தாய்மொழியில் கிடைத்திட வகை செய்யும் போதுதான் தகத்தகாய தமிழை தாபிக்க முடியும்.
மாட்டரசியல் என்ற பெயரில் பாஜகவினர் முன்னெடுப்பது தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, கோடானுகோடி விவசாயிகளுக்கும் எதிரானது.

பிராமணிய மதம் யாகங்கள் என்கிற பெயரில் கால்நடைகளை நெருப்பில் தள்ளி கொன்று குவித்த நிலையில்தான் சமண புத்த மதங்கள் விவசாயத்தை பாதுகாக்க கொல்லாமை, புலால் உண்ணாமை தத்துவத்தை முன்வைத்தன. ஆனால் இன்றைக்கு பிராமணிய மதத்தை, சாதிய அதர்மத்தை நிலைநிறுத்த விரும்புபவர்கள் போலி கொல்லாமை பேசி விவசாயிகளை, உணவு உரிமையை படுகொலை செய்ய முயல்கின்றனர். என் உணவு, என் உரிமை என்கிற முழக்கம் ஓங்கிஒலித்தாக வேண்டும்.

உலகின் மூத்த நதிகளில் ஒன்றான வைகை நதிக்கரையில் தமிழர்களின் தொன்மையை பேசும் வகையில் அமைந்துள்ளது கீழடி. ஆனால் ஆரிய நாகரிகம் தான் தொன்மையானது என்று பேசி வரும் இந்துத்துவா கூட்டம் கீழடி அகழ்வாய்வை மண்மூடி செய்ய முயல்கின்றனர். இது அப்பட்டமான வரலாற்று அழிப்பு.

கீழடி அகழ்வாய்வுக்கு அனுமதி மறுப்பு, நிதி மறுப்பு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய அதிகாரி மாற்றம் என பல சதிச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. தமுஎகச உள்ளிட்ட அமைப்புகளின் தொடர் போராட்டங்களின் காரணமாக மூன்றாம் கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது. ஆனால் அதை தொடரச் செய்ய வரலாற்றின் மூல வேர் வரை அறிய செய்ய தொடர் முயற்சி, முனைப்பு தேவைப்படுகிறது.

தமிழக வரலாற்றை மறைக்க மைய அரசு முயல்கிறது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எழுப்பியுள்ள கேள்வி எளிதாக கடந்துவிடக்கூடியது அல்ல.
இந்த பின்னணியில்தான் மொழிச் சுடர் ஏந்தி, கீழடி மண்ணெடுத்து பண்பாட்டு போராளிகளும், படைப்பாளிகளும், கலைஞர்களும் தலைநகர் சென்னையில் சங்கமிக்க இருக்கிறார்கள்.

ஒற்றைக் கலாச்சார திணிப்புக்கெதிராக ஒன்றாக திரள்வோம்.
உதவாதினி ஒரு தாமதம்,
உடனே எழு தமிழா,
என்ற பாவேந்தரின் பாட்டு வரிகளை ஏந்தி புறப்படட்டும் பண்பாட்டு பெரும் படை.

Leave A Reply