சோத்துப்பாக்கம்,
இயற்கையான காதலை தடுப்பணைப்போட்டு தடுக்கமுடியாது என்று பேராசிரியர் அருணன் கூறினார்.

ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வலியுறுத்தி சேலத்தில் இருந்து வரும் நடைபயண குழுவை வரவேற்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரையடுத்த சோத்துப்பாக்கத்தில் சாதி மறுக்கும் சமய நெறியாளர்கள் பங்கேற்ற  பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னணியின் செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  பேராசிரியர் அருணண் பேசியதாவது:
தேசத்தில் நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆரியமாலா என்ற பெண்ணை காத்தவராயன் காதல் திருமணம் செய்தார்.  காத்தவராயன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஆரியமாலா பிரமண குடும்பத்தைச் சேர்ந்தவர்.  பிராமண  பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்திற்காக காத்தவராயன் கழுமரத்தில் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார். அதேபோல் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மதுரை வீரன்  உயர்சாதி பெண்ணான பொம்மியை காதலித்ததற்காக கொலை செய்யப்பட்டார். அறிவியல் தொழில்நுட்பம்  வளர்ந்த  பின்னும்  சாதி வெறித்தனம் தொடர்கிறது.  சாதி வெறியர்கள் உள்ளனர். அதனால்தான் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 185 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இவை கணக்கில் வந்தவை. வராதவை ஏராளம். உடுமலைப்பேட்டை சங்கர், இளவரசன், கோகுல்ராஜ் உள்ளிட்ட பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒருமுறை காவல் நிலையத்திற்கு சென்றபோது அங்கு ஒரு முதியவர் இருந்தார். அவரிடம் என்ன என்று கேட்டபோது,  “என்னை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்’’  என்று கூறினார். யாரை கொலை செய்தீர்கள் என்று கேட்டபோது, “கீழ்சாதியை சேர்ந்தவனை காதலித்த எனது பேத்தியை கொலை செய்தேன்’’ எனக் கூறினார். மகள் மீது தந்தை வைத்திருக்கின்ற பாசத்தை விட பேத்திமீது தாத்தா வைத்திருக்கக் கூடிய பாசம் அதிகமானது, ஆழமானது. ஆனால் சாதி வெறி, பாசத்தையே சிதைத்துவிட்டது. அனைத்து சாதியிலும் நல்லவர்களும் உள்ளனர். வெறிபிடித்த ஒரு சிலர் மட்டும்  இப்படிப்பட்ட கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதில் ஒருசிலரே தண்டிக்கப்படுகிறார்கள். பலர் தப்பி விடுகின்றனர். இதனால்தான் ஆணவப் படுகொலையை தடுக்க  சிறப்புச்சட்டம் கோருகிறோம்.  ஆணவப்படுகொலை செய்தவர்களை மட்டுமல்லாமல் தூண்டிவிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தலித் வீட்டில் சாப்பிட்டால் சாதி ஒழிந்துவிடுமா? தமிழிசையும், பாஜகவினரும்  தலித் வீட்டில் பெண்கொடுத்து பெண் எடுக்கத் தயாரா. சாதிமறுப்பு திருமணத்தை ஏற்றுக் கொள்கிறோம் என அறிவிக்கத் தயாரா ? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை ஆதரித்து பேச தமிழிசை தயாரா? சாதி ஒழிப்புக்கும் பாஜகவிற்கும் ஆர்எஸ்எஸ்சிற்கும் சம்பந்தமில்லை. சாதிமறுப்பு திருமணம் செய்தால்தான் தீண்டாமையை ஒழிக்க முடியும். சங்கராச்சாரியாரை சந்திக்க குடியரசுத்தலைவர் வருகிறார். மதச்சார்பற்ற நாட்டில் மதம் சார்ந்த நபரை சந்திப்பது முறையா என்ற கேள்வி எழுகிறது. சங்கராச்சாரியார் அமர்ந்திருக்க குடியரசுத்தலைவர் நின்றுகொண்டிருக்கிறார். இந்தியாவின் முதல் குடிமகன் சமமாக உட்கார முடியவில்லை. இதற்கு காரணம் சாதியல்லவா ? வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் விரும்பினால் அவர்கள் திருமணம் செய்துகொள்வதை தடுக்கவோ தாக்கவோ கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.
2015ம் ஆண்டு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரராசன் ஆணவப் படுகொலை குறித்த மசோதாவை தாக்கல் செய்தார். சட்டப்பேரவைத் தலைவர் அதை நிராகரித்தார். இதுகுறித்து தமிழக அரசிடம் கேட்டால் சாதி ஆணவப் படுகொலைகளே  நடக்கவில்லை  என்று கூறுகின்றனர்.சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை சாதி அற்றவர்கள் என அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிமறுப்பு திருமணத்தின் எண்ணிக்கை உயர  உயர இடஒதுக்கீட்டின் அளவும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோரின் எண்ணிக்கை உயரும்.   இயற்கையான காதலை தடுப்பணை போட்டு ஒருநாளும் தடுக்கமுடியாது
இவ்வாறு அவர் பேசினார்

ஜான் சுரேஷ்
கிறிஸ்தவ சமய நெறியாளர் ஜான்சுரேஷ் பேசுகையில், நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் திருமணத்தை நடத்திவைப்பவராக இருக்கிறேன். நான் நிறைய திருமணங்களை செய்துவைத்துள்ளேன். சாதி மறுப்பு திருமணம் செய்த சிலரை பெற்றோர்கள் என்னிடம் அழைத்துவந்து  ஆசிர்வதித்து திருமணம் செய்து வைக்க சொல்வார்கள். நான் அவர்களிடம் கூறுவது பெற்றோர்களால் நிச்சயத்து திருமணம் செய்தவர்கள் மூன்று மாதத்தில் பிரிந்துவிடுகின்றனர். காதல் திருமணம் செய்தவர்கள் நன்றாக உள்ளனர் என்று  கூறி அனுப்பிவிடுவேன்.

இந்திய சமுதாயம் வளர்ச்சியை நோக்கி முன்னேறாமல் இருப்பதற்கு சாதிதான் காரணம். உலகமயமாக்கல் இன்று நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றது. ஆன்மீகமும் மதங்களும்கூடவே நம்மை விழுங்கிக் கெண்டிருக்கின்றன.  அம்பேத்கர் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறினார் சட்டம்தான் ஆட்சி செய்கிறது. மாட்டு மூத்திரத்தையும், மாட்டையும் தாங்கும் பாஜக மனிதர்களை பாதுகாக்க மறுக்கிறது. மனுதர்மமும்  சனாதனமும்  ஒழிந்தால்தான் சாதி ஒழியும். இடதுசாரிகள், தலித்துகள், சிறுபான்மை மக்கள் இணைந்த ஆட்சி வரவேண்டும். அப்போதுதான் இந்த தேசத்தில் தீண்டாமை ஒழியும் என்றார் அவர்.

ஷாஜகான்
இஸ்லாமிய சமய நெறியாளர் ஷாஜகான் பேசுகையில், ஆணவப்படுகொலைகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களான ஹரியானா, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை தமிழகம் பின்னுக்கு தள்ளுகிறது.  பலரது உயிர்கள் ஆணவப் படுகொலையால் பறிக்கப்பட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். அத்திமரத்தில் அனைத்து இடங்களிலும் காய்காய்க்கும். ஆனால் எங்கு காய்த்தாலும் அதை அத்திக் காய் என்றுதான் அழைக்கிறோம். ஆனால் பிராமணர்கள் நீ நெற்றியல் பிறந்தாய், தொடையில் பிறந்தாய், காலில் பிறந்தாய் என பிறப்பை சாதிரீதியாக பிரித்து வைத்துள்ளனர். கடவுள்தான் மனிதனை படைத்தான் எனறால் அனைவரும் மனிதர்கள்தானே. இதில் எங்கிருந்து சாதிப்பிரிவினை வந்தது என்று வினவினார் அவர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ப.பாரதி அண்ணா, சுத்த சன்மார்க்க சமய நெறியாளர் ஏ.கன்னியப்பன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Leave A Reply