சென்னை,
ஆர்.கே.நகர் தேர்தல் பணப் பட்டுவாடா விவகாரத்தில், தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான தகவல்களை அளிக்குமாறு கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்  வைரக் கண்ணன் என்பவர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 8 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம்  பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அம்மா அணி துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர்ராஜூ, தங்கமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடர  பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்   என்று வைரக் கண்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு திங்களன்று (ஜூன் 19) நீதிபதிகள் சத்தியநாரயணன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன், ‘ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதமே எப்ஐஆர் போடப்பட்டுள்ளது’ என்றார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘எப்ஐஆரில்  அடையாளம் தெரியாத நபர்  என்று குறிப்பிட்டுள்ளதாகவும், பல குறிப்புகளை நிரப்பாமல் உள்ளதாகவும்’ கூறினார்.

அப்போது நீதிபதிகள், யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஏன் குறிப்பிடவில்லை என்றும், எதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும்  கேள்வி எழுப்பினர்.  காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  பணப்பட்டுவாடா தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக தேர்தல் ஆணையம் அனைத்து ஆவணங்களையும்  தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் காவல்துறை தரப்பில் வழக்கு தொடர்பான முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply