சேலம், ஜூன் 17-
சேலத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட டாஸ்மாக் கடையை வெள்ளியன்று மூடுவதாக உறுதியளித்த அதிகாரிகள், சனியன்று மீண்டும் திறந்து மது விற்பனை செய்ததைக் கண்டித்து வாலிபர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் சொர்ணபுரி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பள்ளிக்கு மிக அருகில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்தனர். இந்நிலையில் வெள்ளியன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தினர் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகக்றக்கோரி கடையின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மதுக்கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழியை மீறி சனியன்று மீண்டும் அக்கடையை திறந்து மது விற்பனையில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் பெரும் ஆவேசமடைந்த வாலிபர் மற்றும் மாதர் சங்கத்தினர் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் முன்பு அமர்ந்து மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கடையை அகற்றாத அதிகாரிகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோதிலட்சுமி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரவீன் ஆகியோர் கூறுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து இந்த மதுக்கடை இயங்கி வருகிறது. பலமுறை போராட்டம் நடத்திய நிலையில் வெள்ளியன்று கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், தற்போது திடீரென மதுக்கடையை திறந்து
விற்பனை செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது.

அதே நேரம், இந்த கடையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.சுமார் இரண்டு மணி நேர காத்திருப்பு போராட்டத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் கடையை அகற்றுவது தொடர்பாக இரு நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும்பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Reply

You must be logged in to post a comment.