புதுதில்லி, ஜூன் 18.

மத்திய அரசின் விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுதும் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்துமாறு 100க்கும்  மேற்பட்ட விவசாய சங்கங்கள் விடுத்த அறைகூவலுக்கிணங்க நாடு முழுதும் பல்வேறு வடிவங்களில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன.

மத்தியப் பிரதேசத்தில் 6 விவசாயிகள் கொல்லப்பட்ட நிகழ்வைக் கண்டித்தும், பாஜக அரசாங்கங்களின் விவசாய விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்முயற்சியின் விளைவாக நாடு முழுதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயங்கள் ஒன்றுபட்டு ஜூன் 16 அன்று விவசாயிகள் எதிர்ப்பு தினம் அனுசரித்திடுமாறு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. இது அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன.

மேற்கு வங்கம்-கேரளம்-திரிபுரா

மேற்கு வங்கத்தில் உள்ள 355 ஒன்றியங்களிலும் விவசாயிகள் பெரும் திரளாகக் கலந்து  கொண்டு கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் சாலை மறியல்கள் நடைபெற்றன. பாஜக தலைவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. திரிபுரா மாநிலத்தில் மழை கடுமையாகப் பெய்துகொண்டிருந்தபோதிலும் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, ஜார்கண்ட் மாநிலங்களிலும் விவசாயிகள் வீதியிலிறங்கி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி முழக்கமிட்டனர். தெலங்கானா மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேசத்தில் ரேவா என்னும் நகரில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராம் நாராயண் குராரியா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டார்கள். மொரினா மாவட்டத்தில் கைலராஸ் என்னுமிடத்திலும் மற்றும் பல இடங்களிலும் கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மாநிலம் முழுதும் இவ்வாறு 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.  மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள  தேசிய நெடுஞ்சாலையில் மறியல்கள் நடைபெற்றன.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்திலும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கக் கோரியும், மத்தியப்பிரதேச முதலமைச்சர் பதவி விலகக் கோரியும், கால்நடை வர்த்தகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரியும் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன.

சிகாரில் மகாபாதவ் என்னும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் வெங்காயத்தை நியாயமான விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடவும், இதர கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஹரியானாவில் ஒன்பது மாவட்டங்களிலும் விவசாயிகளின் தர்ணா மற்றும் கிளர்ச்சிப் போராட்டங்கள் வீறுகொண்டு எழுந்துள்ளன. சில மாவட்டங்களில் கிளர்ச்சிப்போராட்டங்கள் மாவட்ட ஆட்சியரலுவலகங்களை முற்றுகைக் குள்ளாக்கும் வடிவத்தைப் பெற்றுள்ளன. ஹிசாரில் முற்றுகைப்போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்திலும் சாலை மறியல்கள் வெற்றிகரமாக நடந்துள்ளன. கடந்த ஏழுதினங்களாக அங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகார், அஸ்ஸாம், ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலும் பல இடங்களில் கிளர்ச்சிகள் நடந்துள்ளன.

தமிழ்நாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் மிகவும் எழுச்சியுடன் கிளர்ச்சிப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்திலும், மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் போராட்டங்கள் வெற்றி  பெற்று அரசாங்கங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப் பட்டுள்ளதானது, நாடு முழுதும் உள்ள விவசாயிகள் மத்தியில் உத்வேகத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

(ந.நி.)

Leave A Reply