“தலையில் தலைக் கவசம், கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் சுழல்கிறார். முன்னும் பின்னுமாக படுலாவகமாக பறக்கிறார். அனைவரது பார்வையும் அவரை நோக்கியே இருந்தது. அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது”. சமீபத்தில், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச ரோலர் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் ஒன்றல்ல, இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பியுள்ளார் சாய் லஷ்னா. அதே வேகத்தில் அவரை சந்தித்தோம்…

நீங்கள் எப்போது ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டீர்கள்?
ஏழு வயதில் என்னை ரோலர் ஸ்கேட்டிங் வெகுவாக ஈர்த்தது. அண்ணா நகர்டவர் பார்க் பயிற்சி மையத்தில் சேர்த்தார்கள். அடுத்த சில மாதங்களிலேயே போட்டிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆரம்பம் முதல் வெற்றி பெற்று வருகிறேன்.

பயிற்சி-படிப்பு இரண்டையும் சமாளிக்க முடிகிறதா?
நான் அண்ணா நகரிலுள்ள அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கிறேன். தினமும் காலை 2 மணிநேரம் மாலை 2 மணி நேரமும் பயிற்சி எடுத்து வருகிறேன். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபடுவேன். விளையாடும் நேரம்போக மீத நேரத்தில் படிப்பதற்கு நேரம் ஒதுக்கிமுழுமையாக கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

உங்கள் ஸ்கேட்டிங் வளர்ச்சியின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்?
அப்பா மனோகரன், அம்மா அபிராமி இருவரும் முக்கியமானவர்கள். எனது மாஸ்டர்கள் உண்ணிகிருஷ்ணன், ரவி, பிரவீன், காமேஷ், மணி, பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி ராமச்சந்திரன், மருத்துவர் ஷிமுஸ்வரி.

தாய்லாந்து வெற்றி பற்றி…
12 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக சர்வதேச அளவில் தாய்லாந்து நாட்டில் நடந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட் டேன். ஆனால், உடல் நிலை, நிதி என பல்வேறு பிரச்சனைகளையும் எதிர் கொண்டு தாய்லாந்து சென்றேன். போட்டி  துவங்கும்போது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பயிற்சியாளர்கள் கொடுத்த ஊக்கம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் இரண்டு ‘கோல்டு மெடல்’ அடித்தேன். நாட்டுக்காக விளையாடி பதக்கம் வென்றது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இதுவரை நீங்கள் பெற்ற பதக்கங்கள்?
சென்னையில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றேன். பிறகு மாநில அளவில்செங்கற்பட்டு, திருச்சி, திருப்பூர் என பல ஊர்களில் விளையாடி பதக்கங்களை வென்றிருக்கிறேன் கோவா, பெல்கால், சென்னை என பல பகுதிகளில் நடந்த நேஷனல் விளையாட்டிலும் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன்.

உங்கள் அடுத்த இலக்கு…?
மலேசியாவில் நடக்கும் சர்வதேசப் போட்டி, புனேவில் நடைபெறும் நேஷனல் விளையாட்டிலும் பதக்கம் வெல்ல வேண்டும். ஒலிம்பிக் போட்டியிலும் ரோலர் ஸ்கேட்டிங் அறிமுகம் செய்ய விருப்பதாக கூறுகிறார்கள். அப்படி இடம் பெற்றால் அதிலும் சாதிக்க வேண்டும்.சர்வதேச அளவில் தங்கம் வென்ற 10 வயதாகும் சாய் லஷ்னா, அடுத்து நடக்கும் ஆசியப் போட்டிகளிலும், உலக சாம்பியன் ஷிப் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்கள் வெல்ல நாமும் வாழ்த்துவோம்!

பாராட்டு
மிக இள வயதில் உலக அளவில் தங்கம் வென்று சென்னை வந்த அச்சிறுமியை சந்தித்த ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் மாநிலத் தலைவர் கஸ்தூரி, பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், மாவட்டச் செயலாளர் பிரதாப், அண்ணாநகர் டவர் பார்க் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தியதோடு பாராட்டும் தெரிவித்தனர்.

இந்திய ரயில்வேயின் முதன்மையான தொழிற்சாலையான சென்னை ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலை (ஐசிஎப்) ஊழியர் மனோகரனின் மகள் சாய்லஷ்னாவுக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டர் ஜோரி பாராட்டுத் தெரிவித்துள்ளார். சிஐடியு சங்கத் தலைவர்கள் அ. சவுந்தரராசன், பி.என். உண்ணி, எஸ்.கே.மகேந்திரன், சி. திருவேட்டை, டிஆர்இயு தலைவர்கள் ஜானகிராமன், இளங்கோ உள்ளிட்ட பலரும் வாழ்த்துக் கூறினர்.

நிதி உதவி!
கடந்த 20 வருடமாக செயல்பட்டு வரும் அண்ணா நகர் டவர் பார்க்ஸ்கேட்டிங் பயிற்சி மையம் ஏராளமான வீரர்களை உலக தரம் வாய்ந்தவர்களாக உருவாக்கி உள்ளது. அந்தவரிசையில் சாய் லஷ்னாவும் இடம்பிடித்திருக்கிறார். ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதிக்கும் வீரர்களுக்கு மாநில அரசு கல்வி-வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்து வருவது பாராட்டத்தக்கது. சாய் லஷ்னா போன்றவர்களுக்கு அரசும் விளையாட்டுத் துறையும் நிதிஉதவி செய்து மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஸ்கேட்டிங் பயிற்சியாளர்களும் சங்கத் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

படங்கள்: எஸ்.ராமு

Leave a Reply

You must be logged in to post a comment.