இந்தியாவின் தொல் பழங்காலத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ராபர்ட்புரூஸ் பூட் (ROBERT BRUCE FOOTE) ஆவார். அவர் 1889 ஆம் ஆண்டில் முதன் முதலாக புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளை ஏற்காடு மலையில் கண்டுபிடித்தார். புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல்லாயுதங்கள் தற்போதும் உள்ளனவா என்கிற கள ஆய்வினை அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஓவியர் ராஜகார்த்திக், ராமகிருஷ்ணன் மற்றும் பாண்டியன் ஆகியோர் மேற்கொண்டனர்.

புதிய கற்காலம்:
பழைய கற்காலத்தில் கரடுமுரடான கல்லாயுதங்களை மனிதன் பயன்படுத்தினான். அதிலிருந்து மாறி வழவழப்பான, நன்கு பதப்படுத்திய கற்கருவிகளை தயாரித்தான். இக்கற்கருவிகளை தயாரிப்பதில் புதிய நுட்பத்தை பயன்படுத்தினான். இதனை புதிய கற்காலம்  என்கின்றனர். இது வேட்டையாடும் நிலையிலிருந்து மாறி, ஒரே இடத்தில், தங்கி வேளாண்மை செய்யக் கற்றுக்கொண்ட காலமாகும். அதே சமயத்தில் வேட்டையாடுதலிலும் ஈடுப்பட்டனர்.

இக்காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது கைகோடாரிகள் ஆகும். இதன் ஒரு பகுதி பட்டையாகவும் மறுபுறம் கூர்மையாகவும் இருக்கும். கைக்கோடாரிகள், வாய்ச்சி, உளி, சுத்தியல், வெட்டுக்கத்தி, ஆப்பு என பலவகையான ஆயுதங்களை கற்களில் செய்திருந்தான். பெரும்பாலும் பாசல்ட், டொலரைட், டிராப்டை போன்றகற்களைக் கொண்டே இக்கற்கருவிகளை செய்துள்ளனர்.

ஏற்காடு மலை:
சேர்வராயன் மலையை ஏற்காடு மலை என அழைக்கின்றனர். ஏற்காடு மலையில் 12 கிராமங்களில் புதிய கற்காலக் கல் ஆயுதங்களைக் காணமுடிந்தது. கைக்கோடாரி சுத்தியல், ஆப்பு, உளி, கோடாரி–சுத்தி, தேய்ப்புக்கருவி, சுரண்டிகள், பீப்பாய் வடிவ கல் (Blunt Butt) என பல்வேறு வகையான கல் ஆயுதங்கள் உள்ளன. கருப்பு, சாம்பல் கலந்த அடர் சாம்பல் நிறம், செங்காவி நிறம் என மூன்று நிறங்களில் கல் ஆயுதங்கள் உள்ளன.

பெரும்பாலும் சாம்பல் கலந்த அடர்சாம்பல் நிற ஆயுதங்களே அதிகம் உள்ளன. சுமார் 250 கல் ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் சில கல் ஆயுதங்களின் பெயர்களை கண்டறிய முடியவில்லை.இந்த புதிய கற்காலக் கல் ஆயுதங்களில் 5 செ.மீ நீளமே கொண்ட சிறிய ஆயுதம் உள்ளது. அதுதவிர மிகப் பெரிய இரண்டு கற்கோடாரியும் உள்ளன. இவை 23 செ.மீ. நீளம் கொண்டது. இந்த கல் ஆயுதங்கள் யாவும் சுமார் 3000 முதல் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அக்காலத்தில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இதனை கொண்டு மரப்பட்டைகளை உரிக்கவும், விலங்குகளின் தோலை கிழிக்கவும், இறைச்சியை வெட்டவும் பயன்படுத்தியுள்ளனர்.

வாய்ச்சிகள் கிழங்குகளை சீவுவதற்கும், வெட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரிய கை கோடாரிகளை மரப்பிடியுடன் கட்டி அதனை கொண்டு மரத்தை வெட்டுவதற்கும், மறுமுனையைால் நிலத்தை கீருவதற்கும், கொத்துவதற்கும் பயன்படுத்தியுள்ளான். இரும்பு கருவிகள் வருவதற்கு முன்பு வரை இக்கல் ஆயுதங்களையே மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

வழிபாடு:
பல்வேறு இடங்களில் கிடந்த இந்த கல் ஆயுதங்களை சேகரித்து மரத்தின் அடியில் வைத்து வழிபட்டனர். இதனை சாமிக்கல் (Samikal) என்றும், தெய்வீக கற்கள் (Divine Stones) என்றும் அழைக்கின்றனர். தாங்கள் பயன்படுத்திய இந்த கல் ஆயுதங்களை பாரம்பரியமாக வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் பிள்ளையார், ராமர், பெருமாள், பிடாரி அம்மன் போன்ற வழிபாடுகள் தோன்றியதால் இந்த கல் ஆயுதங்கள் துணைக் கடவுளாக மாறி விட்டன. பிள்ளையாரைச் சுற்றி மற்ற சாதாரண கற்களுடன், கல் ஆயுதங்களும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பற்ற நிலை:
இங்கு வாழும் மக்களிடம் விசாரித்தபோது இவை கல் ஆயுதங்கள் என யாருக்கும் தெரியவில்லை. முன்னோர்கள் இந்த இடங்களில் வைத்து வழிபட்டதால் நாங்களும் தொடர்ந்து வழிபடுகிறோம் என்றனர். வருடத்திற்கு ஒரு முறை பண்டிகைகள் சமயத்தில் மட்டுமே இந்த சாமிக்கற்களை கழுவி சுத்தம் செய்கின்றனர். பல கற்கருவிகள் உடைந்த நிலையில் இருப்பதக் காண முடிந்தது.

புதியதாக கோயில் கட்டிய போது புதிய விக்கிரகங்கள் உள்ளே க்கப்படுகின்றன. இந்த கல் ஆயுதங்கள் மரத்தின் அடியிலும், கோயிலின் பின்புற சுவரை ஒட்டிய பகுதியில் சிமென்ட் தரையுடன் நட்டு பாதி புதைந்த நிலையில் வைத்துள்ளனர். அது தவிர ஒரு சில இடத்தில் ஆற்றிலும், கிணற்றிலும் போட்டதாக தெரிய வருகிறது. இரண்டு இடங்களில் மட்டுமே சிறிய கோயிலில் பூட்டி வைத்துள்ளனர். மற்றஇடங்களில் திறந்தவெளியிலேயே உள்ளன.

வழிபாடு என்ற வகையில் சில இடங்களில் இதனை பாதுகாத்து வருகின்றனர். இதனை பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என பலரிடம் கூறிவருகிறோம். இந்த கல் ஆயுதங்கள் புதிய கற்காலத்தின் பண்பாட்டு சின்னங்கள் ஆகும். இங்கு வாழ்ந்த மக்களின் பண்பாட்டிற்கு சாட்சியாக இந்த கல் ஆயுதங்கள் உள்ளன.

– ஏற்காடு இளங்கோ

Leave a Reply

You must be logged in to post a comment.