கொச்சி மெட்ரோ இன்று அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்துள்ளார்.

நமது சென்னை, டெல்லி உள்ளிட்ட மாநகரங்களில் மெட்ரோ ஏற்கனவே செயல்பாட்டிற்கு வந்தாலும், கொச்சி மெட்ரோ திட்டம் வித்தியாசமான காட்சிகளை அரங்கேற்றியுள்ளது.

அதாவது சிலரது கீழ்த்தரமான அரசியலையும், சிலரது முதிர்ச்சிமிக்க அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது எனக் கூறலாம்.

முதலாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்காக கேரளா சென்ற பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுக்கு ஒப்பிட்டு பேசியிருந்தார். அதன் பின்னர் மாட்டிறைச்சி பிரச்சினையின் போது அவரது சக கட்சியினரே கேரளாவை பாகிஸ்தான் என அழைத்துக் கொண்டனர்.

ஆக, பிரதமரின் பார்வையில் சோமாலியாவில், அவரது கட்சியினர் பார்வையில் பாகிஸ்தானில் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்துள்ளார்.

சரி. சோமாலியாவான கேரளாவில் கூட மெட்ரோ வந்து விட்ட போதும், 2014 பாராளுமன்ற தேர்தலில் வளர்ச்சியின் மாதிரியாக காட்டப்பட்ட குஜராத்தில் இன்னும் மெட்ரோ ரயில் ஓடவில்லை என்பது வேறு விஷயம்.

அடுத்து, இந்த திட்டத்திற்கான பிள்ளையார் சுழி 1996 – 2001 காலக் கட்டத்தில் ஆட்சியிலிருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் முதல்வர் ஈ.கே. நாயனாரால் இடப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து வந்த அரசுகள் மத்திய அரசின் அனுமதிக்காக மிகவும் போராடின. கடைசியாக மார்க்ஸிஸ்ட் கட்சியினரின் ஆதரவுடன் நடந்த முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் அதாவது மன்மோகன் சிங் அரசின் முதலாவது காலக்கட்டத்தில் அனுமதி கிடைத்தது.

அதனை தொடர்ந்து, கேரளாவை ஆண்ட மார்க்ஸிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசுகள் அதிக சிரத்தையுடன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர முனைந்தன.

இந்த திட்டத்தை டெல்லி மெட்ரோ திட்டத்தின் கதாநாயகனான ‘மெட்ரோ மேன்’ என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் முன்னின்று நடத்தினார். இடையில் உம்மன்சாண்டி அரசு ஒருமுறை அவருக்கு நெருக்கடி கொடுத்த போதும், எதிர்ப்பை தொடர்ந்து அவரையே தொடர்ந்து அப்பணியை தொடர அனுமதியளித்தது.

2014 –ல் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பாஜகவிற்கு இந்த மெட்ரோ திட்ட வேலைகளை வேடிக்கை பார்த்தது அல்லாமல் வேறு எதுவும் இல்லை. ஆனால். நீங்கள் எற்ணாகுளம் சென்றால் எல்லா இடமும் மெட்ரோ திட்டத்தை கொண்டு வந்த கதாநாயகன் என பிரதமர் மோடியின் ஆளுயர பிளக்ஸ்கள் பாஜக எற்ணாகுளம் மாவட்டத்தின் பெயரில் வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண முடியும். ( குஜராத்தை விட கேரளாவின் மீது அவ்வளவு கரிசனமாம்)

சரி. இனி விஷயத்துக்கு வருவோம். ஏற்கனவே முதற்கட்ட மெட்ரோ பணிகள் பூர்த்தியான சூழலில், மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடியை வைத்து துவக்கி வைப்பது என கேரள அமைச்சரவை முடிவு செய்தது. இதற்காகவே, அவரது நாள் கிடைப்பதற்காகவே மெட்ரோ ரயிலின் ஓட்டம் தள்ளி போய்க் கொண்டிருந்தது. ( சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா தான் துவக்கி வைத்தார் என்பதை இங்கு கவனிக்க.). பிரதமரின் ஜூன் 17 ஆம் தியதி பிரதமர் அலுவலகம் கேரள அரசுக்கு தேதி குறித்துக் கொடுத்தது. பின்னர் கேரள அரசு சார்பில் நிகழ்ச்சி நிரல் பட்டியலையும், கூடவே, யார் யார், பிரதமருடன் மேடையில் அமர்ந்திருப்பர் என்பதையும் பட்டியலிட்டு அனுப்பியது.

அதில், முதல்வர் பினறாயி விஜயன், கவர்னர் சதாசிவம், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, மெட்ரோ மேன் ஸ்ரீதரன், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, கூடவே உள்ளூர் காங்கிரஸ் எம்.பி கே.வி.தாமஸ் மற்றும் மாநகர மேயர் ஆகியோரின் பெயர்களை பட்டியலிட்டு அனுப்பியது. ஆனால், பிரதமர் அலுவலகம், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, மெட்ரோமேன் ஸ்ரீதரன், உள்ளூர் எம்.பி கே.வி தாமஸ் மற்றும் மேயரை மேடையில் கூட உட்கார பாதுகாப்பு காரணங்களை கூறி அனுமதி மறுத்தது. அத்துடன் நிகழ்ச்சியில் பேச, பிரதமர் மோடி, அமைச்சர் வெங்கையா நாயுடு. முதல்வர் பினறாயி விஜயன் ஆகியோரை மட்டுமே அனுமதிக்க முடியும் என நிகழ்ச்சி நிரல் பட்டியலை திருத்தி அனுப்பியது.

பிரதமர் அலுவலகத்தின் இத்தகைய நடவடிக்கை கேரள மக்களுக்கும், முதல்வர் பிணறாயி விஜயனுக்கும் விரக்தியை ஏற்படுத்தியது எனக் கூறலாம். தொடர்ந்து, முதல்வர் பிணறாயி விஜயன், பிரதமர் அலுவலகத்திற்கு, மெட்ரோ மேன் ஸ்ரீதரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்டோர் நிச்சயமாக மேடையில் துவக்க நிகழ்ச்சியில் இருந்தாக வேண்டும் என கடிதம் எழுதவே, அதற்கான பதிலும் கிடைத்தது.

இன்று காலை. 11 மணியளவில் துவக்க நிகழ்ச்சி. மெட்ரோ ரயிலின் ஓட்டத்தை ரிப்பன் வெட்டி துவக்க தயாரானார் பிரதமர் மோடி. கேரளா முதல்வரின் கண்கள், மெட்ரோ மேனை தேடி அலைந்தது. கேமராக்களின் முன்னில் தென்படாமல் ஓரமாக, நின்ற ஸ்ரீதரனை முன்னுக்கு வரும்படி அழைக்கிறார் முதல்வர் பினறாயி விஜயன். அவரும் வரவே, ரிப்பன் வெட்டி திறக்கப்படுகிறது. பின்னர், மெட்ரோ மேன் ஸ்ரீதரனை பிரதமரின் முன்னில் நிறுத்துகிறார் முதல்வர் பினறாயி விஜயன். பிரதமர் மோடியும் அவருக்கு கைகுலுக்குகிறார். தொடர்ந்து, எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, எம்.பி.கேவி தாமஸ் உள்ளிட்டவர்கள் மேடையில் அமர நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து முடிகிறது.

ஆனால், கேரளியர்கள் இன்றைய நிகழ்ச்சியில் ஒன்றை கவனிக்க தவறவில்லை. கொச்சியிலிருந்து பாலாரிவட்டம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, கவர்னர் சதாசிவம், முதல்வர் பினறாயி விஜயன் ஆகியோர் மட்டுமே பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பயணத்தின் இடையில் கூடுதலாக கேரள ஆர் எஸ் எஸ் தலைவர்களுள் ஒருவரும், மாநில பாஜக தலைவருமான கும்மனம் ராஜசேகரனும் ஒட்டிக் கொண்டார். ஒரு வார்டு உறுப்பினர் போலும் இல்லாத கும்மனம் ராஜசேகரன் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எப்படி ஏறிக் கொண்டார் என்பது மிகப்பெரும் விவாதமாகவும், கூடவே மெட்ரோமேன் ஸ்ரீதரனையே அனுமதிக்காதவர்கள் எந்த முறையில் கும்மனம் ராஜசேகரனை அனுமதித்தார்கள் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

சரி. இந்த மெட்ரோ திட்டம் துவக்க நிகழ்ச்சியில் கேரளாவை ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் முதல்வர் பினறாயி விஜயன் நமது சமூகத்திற்கு சில உதாரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

வளர்ச்சி திட்டம் என்பது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றியே. அதில் பங்களித்தவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார். உதாரணம் பிரதமர் புறக்கணித்தாலும், மெட்ரோ மேன் ஸ்ரீதரனை கேமராவின் முன்னில் வரவழைத்தது, அதுமட்டுமல்ல, மெட்ரோ பணியாற்ற கடை நிலை ஊழியர்கள் வரை பெரும்பாலானோர் வெளிமாநிலத்தவர். அவர்களுக்கு, அறுசுவை விருந்து (சத்யா) வழங்கப்பட்டு ஒரு குடும்ப நிகழ்ச்சியை போல் நடத்தி கௌரவித்தனர்.

அடுத்து, ஒரு திட்டம் நடைமுறைக்கு வர ஒரேயொரு அரசியல் கட்சி மட்டும் நடைமுறைக்கு வருவது சாத்தியமல்ல. வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே கால அளவு கொண்ட ஒரு ஆட்சி, மறுமுறையும் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு தொடர்வது என்பது எப்போதும் சாத்தியமற்றதல்ல. அப்படியிருக்க, ஒரு திட்டம் ஒரு கட்சி தலைமையிலான ஆட்சியின் முயற்சியால் கொண்டு வரப்பட்டாலும் கூட, அது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால், அடுத்து வரும் கட்சியின் ஆட்சியின் கையில் தான் உள்ளது. ஆக, வெறுமனே சொல்லும்படியான வளர்ச்சி திட்டங்களின் பின்னில் ஒரு தனி நபரோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டுமே இருந்தது என வாதிடும் “ சாதனை அரசியலை” ஒதுக்கி வைத்து விட்டு அனைவரையும் உள்ளடக்கிய நடவடிக்கையாகவே கேரள முதல்வரின் செயல்பாடு அமைந்துள்ளது.

மக்களுக்கு சேவை செய்யவும், மண்ணின் வளர்ச்சியை முன்னிறுத்தவும் மனத் தூய்மை மிக்க தெளிவான அரசியல் பார்வை வேண்டும். அத்தகைய பார்வை இருந்தால் மட்டுமே மக்களின் சேவையை, அவர்களை இனத்தாலோ, ஜாதியாலோ அல்லது மொழியாலோ பிரிக்காமல் அனைவருக்கும் பொதுவாக முன்னெடுக்க முடியும் என்பதை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளியில் பயின்ற முதல்வர் பினறாயி விஜயன் நிரூபித்துள்ளார். மாறாக, ஆர் எஸ் எஸ் பள்ளியில் பயின்ற பிரதமர் மோடியும், கும்மனம் ராஜசேகரனும் கேமராவைத் தேடி அலைகிறார்கள்.மோடியின்  சொந்த கட்சி விழா என்றால் கும்மனம் ராஜசேகரனை மோடி தனது தலையில் கூட தூக்கி உக்கார வைத்துக் கொள்ளலாம்.. அரசு பணத்தில் இந்த விளம்பரம் தேவையா… இதெல்லாம் ஒரு பொழப்பா…?

  • நந்தகுமாரன்

Leave A Reply