கரூர்;
குடியரசுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கூறி 17 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது, அதனுடைய முடிவுகள் 2 நாட்களில் தெரியும் என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்து தரக் கோரி பள்ளி ஆசிரியர்கள், அந்த பகுதி கிராம மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.25 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி கொடுத்துள்ளார்.

இதற்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டார். பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அந்த பகுதி கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த டி.கே.ரங்கராஜன்;
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும் என்றும் திருமாவளவன் தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ரஜினிகாந்த் இன்னும் எந்த கட்சியையும் உருவாக்கவில்லை, அவர் கட்சியின் கொள்கை என்ன என்பதையும் அறிவிக்கவில்லை, விருப்பதின் அடிப்படையில் ஒரு தலைவர் கூறிய கருத்தின் மீது மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து சொல்லாது என்றார்.

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டை விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் விரும்புகின்றன. அதை சட்டமன்றத்தில் விவாதிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.சுப்பிரமணி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் த.சகிலா வரவேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. இராமநாதன், ஊர் பெரியவர் சின்னசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி ஆசிரியை ஜி.நிர்மலா நன்றிகூறினார்.

Leave A Reply

%d bloggers like this: