கோவை, ஜூன்.-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய  சம்பவத்தை கண்டித்து கோவையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆவேசத்தோடு பங்கேற்று வன்முறையாளர்களை கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும்,  மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, முத்துசாமி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மயூர ஜெயக்குமார், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநிலப்பொருளாளர் எம்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனிஸிட் லெபரேசன் தமிழகத்தின் நிர்வாகி பேரோஸ்கான்,  மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சேதுபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், மண்டல செயலாளர் சுசி.கலையரசன் மற்றும் திக, பெரியார் திக, தலித் மற்றும் முற்போக்கு அமைப்புகளின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மக்கள் விரோத கொள்கையை நடத்தும் மோடி அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்ப சங்பரிவார் அமைப்புகளை தூண்டிவிட்டு இதுபோன்ற வன்முறை செயல்களை செய்வதாகவும், இந்துத்துவ சக்திகளின் வெறியாட்டத்தை செங்கொடி இயக்கம் முறியடிக்கும் என்றும் ஆவேச  முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply