•தன் தலைமகனை இழந்த ஒரே நாளில் வரவேற்பு நிகழ்வுக்கு தலைமை தாங்கிய ஆத்தூர் கலைமணி !
•60 கி.மீ. கடந்த போதும் உற்சாகம் பொங்கும் 72 வயது இளைஞர் நாமக்கல் ப.ராமசாமி !
•நடைபயணத்தில் மதுரை பர்வத வர்த்தினி, தனலட்சுமி, காஞ்சிபுரம் பிரியா !
•2 நாட்களும் 200 இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்ற அற்புதம் !
– என நெகிழ்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ்.
ஜுன் 8 காலை முதலே சேலம் சிறைத்தியாகிகள் நினைவகம் பரபரப்பு பற்றிக்கொண்டு இருந்தது; ஆம், மறுநாள் வரலாற்றுச் சிறப்புமிகு ஒரு நிகழ்வு நிகழப்போகிறதென்ற ஆச்சரியமாக கூட இருக்கலாம் அல்லவா?
ஆம், தமிழக வரலாற்றில் ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் வேண்டுமென்று, ஆணவக் கொலைக்கு ஆளான கோகுல்ராஜ் மண்ணில் இருந்து சென்னைக்கு மகத்தான நடைபயணம் 369 கி.மீ. தூர நடைபயணம் புறப்படப் போகிறதென்பது வரலாற்று நிகழ்வுதானே!
இதுவரை இந்தத் தமிழகத்தில் யாரும் செய்யவில்லையே!
“அன்று இரவே மாநிலம் முழுவதுமிருந்து நடைபயணப் போராளிகள் வந்து சேர்ந்து விட்டனர். ஒரு வாரமாகவே தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட மையமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாநகர வடக்கு பகுதிக் குழுவும் தயாரிப்பு பணிகளில் மூழ்கி கிடந்ததை பார்க்க முடிந்தது.” என விவரிக்கத் துவங்கினார்.
“ஜுன் 9 காலை 7 மணிக்கே மானா கறிக்குழம்புடன் அருமையான காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது.மாட்டிறைச்சி தடையை எதிர்த்த உணர்வுப்பூர்வமான குறியீடாகத் துவங்கியது.
விசிக தலைவர் திருமாவளவன், தீ.ஒ.மு. தலைவர் பி.சம்பத் இன்னும் பிற தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பு தலைவர்கள் மற்றும் சிஐடியு, விச, விதொச, மாதர், வாலிபர், மாணவர், எல்ஐசி, அரசு ஊழியர்-ஆசிரியர் என சுமார் 1000 க்கும் மேலானவர்கள் பங்கேற்புடன் மிகுந்த சிறப்பும், எழுச்சியும் பெற்றது துவக்க நிகழ்ச்சி!
சாதி ஆணவக் கொலைக்கு பலியான இளவரசன், கோகுல்ராஜ் உள்ளிட்டோரின் குடும்பங்களை கவரவித்தது உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது”
-அனுபவப் பகிர்வைத் தொடர்கிறார் சாமுவேல்:
இயற்கையான கூட்டாளிகள் யார்?
“சாதி ஆணவம்… தலித் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல; மேல் சாதி என வர்ணிக்கப்படும் சாதிக்குள்ளேயே கலாச்சார கொடுக்கல் வாங்கல் இருக்காது; ஆனால் பொருளியல் கொடுக்கல் வாங்கல் மட்டும் இருக்கும்; இந்த, வேற்றுமை நீக்கி சமத்துவம் கொண்டு வரவே… பேணவே… சாதி ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தை மத்திய – மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும்!” என்கிற திருமாவின் பேச்சு நச்!
“சிபிஎம் போன்ற தேசிய இடதுசாரி கட்சிகள் இப்பிரச்சனையைக் கையில் எடுக்கிற போதுதான், அதன் தாக்கம் அரசுகளை கவ்வுகிறது; ஆகையால் தான் எங்களின் இயற்கையான கூட்டாளிகளாக இடதுசாரிகள் அமைந்து விட்டார்கள்!” என்கிற திருமா பேச்சு உளப்பூர்வமான எழுச்சியே!
பயணம் அண்ணல் அம்பேத்கர் திரு உருவச் சிலைக்கு மலராஞ்சலி செலுத்தி, விண்ணதிர முழக்கமிட்டு தொடங்கியது!
அம்மாப்பேட்டை சேலம் மாநகரம் கிழக்கு சிபிஐ(எம்) தோழர்கள் நீர் மோர் கொடுத்து வரவேற்றனர்! அடுத்து வாழப்பாடி தாலுகா சிபிஐ(எம்) தோழர்கள் சார்பில் உடையாப்பட்டி, அயோத்தியாப்பட்டினம் ஆகிய இடங்களில் நீர்மோர் கொடுத்து ஒலிபெருக்கி அமைத்து சுட்டெரிக்கும் வெயிலையே துரத்தியடித்தனர்!
அதனை தொடர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்பில் மதிய உணவு மாலை 3.30 மணிக்கு அளித்தனர்; பயணக்குழு வழி நெடுகிலும் பெற்று சென்ற வரவேற்பே மதிய உணவு எடுத்துக் கொள்ள தாமதமானது!
மீண்டும் உடனே 4.30 மணிக்கு துவங்கி எம்.பெருமாபாளையத்தில் சிறப்புமிகு வரவேற்பு பொதுக்கூட்டம் நடத்தினர்!
இரவு உணவை எடுத்துக் கொள்ள இரவு 11 மணி ஆகிவிட்டது!
அன்று அணிந்து வந்த சிவப்பு – நீலம் உடை வேர்வையால் நனைந்திருந்தது. அவற்றை கசக்கி போட்டுவிட்டு, குளித்துவிட்டு உறங்கச் செல்ல நள்ளிரவு ஒரு மணி ஆகிவிட்டது பலருக்கு; சிலரோ படுத்த வாக்கில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். கண்களைத் தூக்கம் எப்போது தழுவியது என்று தெரியவில்லை!
மறுநாள் அதிகாலை 5.00 மணிக்கு விசில் சத்தம் கேட்டதுதான் தாமதம்; ஒரு மணி நேரத்தில் பயணத்திற்கு எல்லோரும் தயாராகி விட்டார்கள். ராணுவ கட்டுப்பாடு என்கிறார்கள்; அப்படியென்றால் என்ன வென்பது இங்கே வந்து தெரிந்து கொண்டால் நன்று!
ருசியோ ருசி!
10.6.17 இரண்டாம் நாள் பயணம் காலை 6.45 மணிக்கு நடைபயணம் துவங்கியது; காலை 10.15 மணிக்கு காலை உணவளித்து வாழப்பாடி தாலூகாகுழு தோழர்கள் பிரியா மனதுடன் வழி அனுப்பினர்; அவர்களை இன்முகத்துடன் வரவேற்று அழைத்து சென்றனர் பெத்தநாயக்கன்பாளையம் சிபிஐ(எம்) தாலுகா குழு தோழர்கள்!
புத்தக்கவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைக் கட்சி கிழக்கு மாவட்டத்தலைவர் மாஸ்கோ ரவி தலைமையில் பட்டாசு வெடியோடு, பாண்டு வாத்தியமிட்டு வரவேற்று பயணக்குழுவினரை திக்குமுக்காடச் செய்தனர்!
இன்றும் மதிய உணவு 2.30 மணிக்கு மானா வறுவலோடு, தென்னை, பாக்கு தோப்பில் விருந்துபோல் உபசரிப்பு. ருசியோ ருசி மானா வறுவல்!
பெ.நா.பாளையம் வரவேற்பு முடித்து, வழியனுப்ப… ஆத்தூர் தாலுகா குழு சிபிஎம் தோழர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்; நரசிங்கபுரத்தில் பழம், முறுக்கு கொடுத்து தோழர்களுக்கு மேலும் முறுக்கேற்றினர்! ஆனால் இந்த முறுக்கையே முறித்த வண்ணம் ஆதி தமிழர் கட்சி தலைவர் கு. ஜக்கையன் தலைமையில் ராசிபுரம் கூட்ரோட்டில் வரவேற்பு அமைந்து விட்டது எனலாம்!
என் கட்டை வேகாது
ஆத்தூர் பேருந்து நிலையத்தில்… தன் மகன் இறந்து, அடக்கம் செய்த மறுநாளே “என் துக்கம் என்னோடு இருக்கட்டும்; வீதியிலே செங்கொடி மைந்தர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க நடைபயணம் போகும்போது நான் பங்கேற்காமல் விட்டால், என் கட்டை வேகாது!” என தன் தனயன் உடலைத் தகனம் செய்த அந்த துக்கம் ஆறாமல்… அது தொண்டையை அடைத்தபோதும்கூட நிகழ்ச்சியில் பங்கேற்றார் கலைமணி என்ற பெரியவர். தோழர்கள் சிலிர்த்துப் போனோம்.
நல்லா செய்யுங்கப்பா…
செல்லும் வழியெல்லாம் தலித் மக்கள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களும் ஓடோடி வந்து “என்னா நடந்து போறீங்க?” என வழிமறித்து கேட்க… “கவுரவ கொலைய தடுக்க சட்டம் கேட்டு நடந்து போறோம்” என நடைபயண போராளிகள் கூற, “ஆமாங்க அது கண்டிப்பா வேணும்” என மக்கள் வாயார வாழ்த்தி, “செய்யுங்கப்பா… நல்ல செய்யுங்க…” என மக்கள் வழியனுப்பி வைத்தது… நடைபயண போராளிகளுக்கு மட்டுமல்ல… உடன் சென்றோரையும் உற்சாக மழையில் நனைய வைத்தது.
இரவு ஆத்தூரில் தங்கி, ஜுன் 11 காலை ஆத்தூரில் துவங்கி, காலை உணவு காட்டுக்கோட்டையில் எடுத்துக் கொண்டனர். நடைபயண போராளிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக திருநங்கைகள் வரவேற்பு தந்தது அற்புதம் ! மதிய உணவு தலைவாசலில் எடுத்துக் கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் தனது 3 நாள் பயணத்தை நிறைவு செய்து இரவு 7.00 மணி அளவில் விழுப்புரம் (தெற்கு) மாவட்டத்தில் (வி.கூட்ரோட்டில்) துவங்கியது!
விழுப்புரம் மாவட்டத்தின் எழுச்சியான வரவேற்பும், சேலம் மாவட்டத்தின் நெகிழ்ச்சியான வழியனுப்பும் !
நடைபயணம் தொடர்ந்து மேற்கொண்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக ஜுன் 23 சென்னை கோட்டையில் நிறைவுறுகிறது.
இதுவரை வாக்கிங் கூட போகாதவர்கள் தொடர்ந்து நடந்ததால், கால், கை உடம்பு வலியால் சற்று தாமதம் ஆனாலும் வீரியத்துடன் முன்னேறி வருகிறது சென்னையை நோக்கி..!
சப்தர்ஹஸ்மி, மாங்குயில், புயல் தப்பாட்டம்
பயணத்தில் புதுச்சேரி சப்தர் ஹஸ்மி கலைக்குழு-சேலம் மாங்குயில் கலைக்குழு மற்றும் விருதுநகர் புயல் தப்பாட்டம் கலைக்குழு ஆகியவற்றின் நிகழ்ச்சிகளும், “வீதியிலே… வீதியிலே…” உள்ளிட்டு இதற்கென்றே மதுரை வெண்புறா-கருணாநிதி தயாரிப்பில் வந்துள்ள பாடல்களும், அதன் வைர வரிகளும் எழுச்சியுறும் வகையில் அமைந்துள்ளன.
இனியொரு விதிசெய்வோம்; ஆணவக் கொலையைத் தடுப்போம்!

Leave a Reply

You must be logged in to post a comment.