ஷில்லாங்;
மத்திய அரசு அறிவித்த மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக, மேகாலயா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்குத் தடை விதித்து, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. இந்தத் தடை அறிவிப்பு, நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும், மத்திய அரசின் தடையைக் கண்டித்தனர்.
குறிப்பாக, இடதுசாரிகள் ஆளும் கேரளா, திரிபுரா மற்றும் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, புதுச்சேரி, திரிணாமூல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநிலங்கள், மாட்டிறைச்சிக்கான தடையை ஏற்க முடியாது என்று வெளிப்படையாக அறிவித்தன.
இப்பிரச்சனைகளில் மாநில முதல்வர்களை ஒன்றுதிரட்டும் பணியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இறங்கினார். அவர்களுக்கு கடிதமும் எழுதினார். அத்துடன், கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை, மாட்டிறைச்சி வருவல் விருந்துடன் நடத்தி, அதில், மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.
கேரளம் காட்டிய இந்த வழியில் தற்போது மேகாலயா மாநிலத்திலும், சட்டப்பேரவையைக் கூட்டி, மாட்டிறைச்சி தடைக்கு எதிராக, ஆளும் காங்கிரஸ் அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மாட்டிறைச்சி என்பது தங்களின் பாரம்பரிய உணவு; அதைப் பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை; எனவே, இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏற்க முடியாது என்று மேகாலயா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் கூண்டோடு அக்கட்சியிலிருந்து விலகியதுடன், இங்குள்ள பாஜக அலுவலகங்களையும் இழுத்து மூடினர். மாட்டிறைச்சி விருந்து நடத்தியும் தங்களின் எதிர்ப்பை பாஜகவுக்கு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.