—–சிதம்பரம் இரவிச்சந்திரன்——
மருந்துகளுடைய பொதுவான பெயர்களை மட்டுமே குறிப்புச் சீட்டில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் செய்து மருத்துவர் தொழிலின் சேவைகளைப் பற்றிய விதிமுறைகளில் திருத்தம் செய்து கடந்த 2016 ஆம் வருடம் உத்தரவு வெளியிடப்பட்டது.
இதற்குப் பிறகும் மருந்துகளைத் தயாரிக்கும் தயாரிப்புக் கம்பெனிகளின் ப்ராண்டுகளுடைய பெயர்களையே மருத்துவர்கள் குறிப்புச்சீட்டில் எழுதித் தருகிறார்கள் என்ற புகார் பெருமளவில் வந்ததால் சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் (Medical Council Of India) இது குறித்த புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது. மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரை செய்யும்போது மருந்துகளுடையப் பொதுவான பெயர்களை மட்டுமே மருந்துச்சீட்டில் எழுதித் தரவேண்டும் என்று இந்தப் புதிய திருத்தம் கூறுகிறது.
ஜெனரிக் மருந்துகள் அல்லது பொதுவான பெயர்களுடன் மருந்துகள் (Generic medicines)  என்றால் என்ன? மருந்துகளுக்குப் பொதுவாக மூன்றுவிதமான பெயர்கள் உண்டு. மருந்துகளின் ரசாயனப் பெயர்கள், அதனுடைய பொதுவான பெயர்கள் (generic names) மற்றும் அவற்றைத் தயாரிக்கும் கம்பெனிகளுடைய அவை வைக்கும் ப்ராண்டின் பெயர்கள்                 (branded names) என்பவையே அவை. உதாரணமாக அசிட்டைல் பாலிசிக் ஆசிட் என்பது ஒரு ரசாயனப் பெயர் ஆகும். இதே மருந்துடைய பொதுப்பெயர்தான் ஆஸ்ப்ரின் .
இதே மருந்து ஆஸ்ப்ரோ, எக்கோஸ்பிரின் என்று வெவ்வேறு பெயர்களில் அந்தக் கம்பெனிகளுடைய ப்ராண்டுகளுடைய பெயர்களில் வருகின்றன. மருந்துக் கம்பெனிகள் ஒரே மருந்தை வெவ்வேறான அவரவர்களுடைய ப்ராண்டுகளின் பெயர்களிலேயே விற்கின்றன. ஒரே பொதுவான பெயருடன் இருக்கும் ஒரே மருந்தை ஆயிரக்கணக்கான ப்ராண்டுகளில் விற்கின்றன. இந்தப் ப்ராண்டுகளிடையே விலையிலும் அதிகமான வித்தியாசங்கள் காணப்படுகின்றன. விலை குறைந்தவையும் இருக்கின்றன.
விலை அதிகமானவையும் இருக்கின்றன. ஆனால், மருந்துகளின் விஷயத்தில் ஒரு பிரச்சனை நோயாளிகளுக்கு மருந்துகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இல்லை. நுகர்வோருக்கு தான் நுகரும் பொருளைத் தேர்ந்தெடுப்பதற்கு மருந்துகள் விஷயத்தில் மட்டும் உரிமை இல்லை. மருத்துவர்கள் தான் எந்த மருந்து தேவை, எத்தனை நாள் சாப்பிட வேண்டும், எந்தக் கம்பெனியுடைய மருந்தைச் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரை செய்வது…
இந்த சூழ்நிலையில் மருந்துக் கம்பெனிகள் பலவிதங்களிலும் மருத்துவர்களைக் கவர்ந்து தங்களுடைய ப்ராண்டு மருந்துகளின் ஒரு குவியலை அவர்களுக்குக் கொடுத்து அவற்றையே நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யச் சொல்கிறார்கள். இவ்வாறு செய்யும் போது பல சமயங்களிலும் தன்னைக் கவர்கின்ற மருந்துக் கம்பெனிகளுடைய மருந்துகளை அவை விலை அதிகமானதாக இருந்தாலும் அவற்றையே நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
கோடி கோடியாக லாபம் ஈட்டும் பன்னாட்டுக் கம்பெனிகள் உற்பத்தி செய்யும் பல வகையான மருந்துகள் அதே தரத்தோடு செலவு குறைந்த வழியில் இந்தியாவில் சிறிய மருந்துக் கம்பெனிகள் தயார் செய்கின்றன. மருத்துவர்கள் மருந்துகளுடைய ப்ராண்டு பெயர்களை எழுதித் தருவதன் மூலம் நோயாளிகள் விலை அதிகமான பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் தயாரிக்கும் மருந்துகளை வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
இது பொதுவாக நிலவிவரும் ஒரு புகார் ஆகும். பொதுவான பெயருடன் வரும் மருந்துகள் எல்லா நோய்களுக்கும் தயாரிக்கப்பட வேண்டும். அவற்றின் தரமும் உறுதி செய்யப்பட வேண்டும். மருந்துகளின் விலையைக் குறைக்க இது வழிவகுக்கும்.
அரசுத் துறையிலேயே மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு விலை குறைவாக விற்கப்படவேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது. இன்று ஒவ்வொரு சிறிய உடல் நலக் குறைபாட்டுக்கும் கூட ஏராளமான மருந்துகள் சந்தையில் சுலபமாகக் கிடைக்கின்றன. இவ்வாறு பல மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதும், அவை எல்லாம் சந்தைப்படுத்தப்படுவதும் மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் தான் தயாரிக்கப்பட்டவையா என்று உறுதி செய்ய எந்த ஒரு முறைமையும் இங்கே இல்லை.
நம் நாட்டில் ஆயிரக்கணக்கான மருந்துக் கம்பெனிகள் இருக்கின்றன. காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுகிற பாராசிட்டமால் அல்லது நுண்ணுயிர்க்கொல்லியான (antibiotic) மருந்தான அமாக்ஸசிலின் போன்ற மருந்துகள் இந்தியாவில் நூற்றுக்கணக்கான ப்ராண்டுகளில் கிடைக்கின்றன.
சில கம்பெனிகள் ப்ராண்டு பெயர் இல்லாமலேயே மருந்துகளை உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்புகின்றன. அவற்றில் எதில் உண்மையில் அமாக்ஸ்சிலின் இருக்கிறது என்று மிக சரியாக சொல்வதற்கு இந்தியாவில் ஒரு சரியான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இப்போது விற்பனைக்குக் கிடைக்கின்ற பொதுப்பெயருடன் இருக்கும் மருந்துகளுடைய தரத்தை உறுதி செய்வதற்குரிய வசதிகள் செய்யப்பட வேண்டும். அப்போது தான் படிப்பறிவு இல்லாத நம் நாட்டு ஏழை கிராமப்புறத்து மக்கள் ஆரோக்கியமாக வாழ வழி பிறக்கும்.
நன்றி: விஞ்ஞானச் சிறகு (ஜூன்)

Leave a Reply

You must be logged in to post a comment.