தருமபுரி,
துப்புரவுதொழிலாளர்களை கையால் மலம் அள்ள நிர்ப்பந்திக்கும் மாரண்ட அள்ளி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பேரூராட்சியில் 40 தொழிலாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு குப்பை, மனிதமலம் ஆகியவற்றை அப்புறப்படுத்த உரிய உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. இப்பேரூராட்சி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் மனித மலம்,குப்பைகளையும் கையால் அள்ளிவந்தனர். நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள் தடைவிதித்தும், மாரண்ட அள்ளிபேரூராட்சி நிர்வாகம் தொழிலாளர்களை நிர்ப்பந்தித்து செய்யவைத்தது.
இதை நிறுத்தக்கோரி  மே 27 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இனி கையால் மலம் அள்ளவைக்கமாட்டோம் என நிர்வாகம் உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை கையான்டது. 8 துப்புரவு தொழிலாளர்களுக்கு பழிவாங்கும் விதமாக குறிப்பானை வழங்கியது.
இதனையடுத்து தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்.ஆறுமுகம் மாவட்ட இணைச் செயலாளர் சண்முகம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் அங்கம்மாள், துப்புரவுப் பணியாளர் சங்க ஆர்.செல்வம் ஆகியோர் பேசினர்.
பேரூராட்சிகள் இணை இயக்குனர் வட்டாட்சியர் அருண்குமார் செயல் அலுவலர் சாம்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கையால் மலம் அள்ள நிர்பந்திக்கப்படமாட்டாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பாணை திரும்பபெறப்படும் என உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.