மஞ்சணத்தி முழுத்தாவரமும் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நோயினால் தளர்ந்த உடலை ஆரோக்கியமாக்கும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.
இலை, காய், பழங்கள் ஆகியவை வீக்கம் – கட்டிகளைக் கரைக்கும். மாதவிலக்கை தூண்டும். உடல் வெப்பத்தை கட்டுப் படுத்தும். பட்டை கரப்பான், புண்கள், கழலை போன்றவற்றை குணமாக்கும். வேர், கழிச்சலுண்டாக்கும்.
மஞ்சணத்தி, மர வகையைச் சார்ந்தது. எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோணமான தண்டுக் கிளைகளையும், வெண்ணிறமான 5 இதழ்கள் கொண்ட மலர்களையும் உடைய தாவரம். 10 மீ வரை உயரமானவை. மரப்பட்டை, தடிப்பாக, வெளிர் மஞ்சள் நிறமாக உரித்த வடுக்களுடன் காணப்படும்.
காய்கள், முண்டுகளுடனும் சிறு கண்களுடனும் கூடியவை. பழங்கள் கரு நீல நிறமானவை. கட்டை உட்புறம் மஞ்சளாக இருக்கும். நுணா, தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு.
தமிழகமெங்கும் சமவெளிகள், கடற்கரைப் பகுதிகளில் பரவலாக வளர்கின்றது. மஞ்சணத்தி தளிர், இலை, காய், பட்டை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
முதிர்ந்த கட்டைகள் மஞ்சள் நிறமானவை. இவை விவசாயக் கருவிகள் செய்யவும், சிறு மரச் சாமான்கள், பொம்மைகள் செய்யவும் மிகவும் உகந்தவை.
மரப்பட்டையை நசுக்கி, வெந்நீரில் போட்டு கொதிக்க வைக்க, மஞ்சள் நிறமான சாயம் நீரில் கரையும். இந்த சாயத்தால் துணிகளுக்கு நிறமேற்றும் செயல் இருந்து வந்துள்ளது குறிப்படத்தக்கது.
குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், கழிச்சல் ஆகியன தீர 5 மஞ்சணத்தி இலைகளைப் பசுமையானதாகச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றிரண்டாக நசுக்கி ½  லிட்டர் தண்ணிரீல் இட்டுக் காய்ச்சி குடிநீர் செய்து கொண்டு தினமும் காலை மாலை வேளைகளில் 20 மிலி வீதம் உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.
புண்கள், சிரங்குகள் குணமாக மஞ்சணத்தி இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.
பல் சொத்தை குணமாக முதிர்ந்த மஞ்சணத்தி காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தூளால் பல் துலக்கி வரவேண்டும்.
பேதியாக 10 கிராம் மஞ்சணத்தி வேரை நசுக்கி  ½  லிட்டர் நீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
குழந்தை மருத்துவத்தில் மஞ்சணத்தி: 5 மஞ்சணத்தி இலை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து, 2 கிராம் சுக்கு, ஒரு தேக்கரண்டி ஓமம் எடுத்துக் கொண்டு முதலில் மஞ்சணத்தி இலை, வேப்பங் கொழுந்தை வதக்கி, இதனுடன் சுக்கு, மிளகு, ஓமத்தை நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.
5 மஞ்சணத்தி இலை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து இவற்றை வதக்கி, இதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி ஓமம் ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம் சேர்த்து  ½ லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலை இரு வேளைகள் வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க வயிற்று உப்புசம் குணமாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.