நாகர்கோவில்;
புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயற்சித்த ஆர்எஸ்எஸ் குண்டர்களைக் கண்டித்தும், குமரி மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் அராஜகங்களைக் கண்டித்தும் குமரி மாவட்டம் தக்கலையில் அனைத்துக்கட்சிகளின் சார்பில் வெள்ளியன்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
பாஜகவின் வகுப்புவாத அடக்குமுறை களைக் கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியின் இரண்டு மூன்று கோஷ்டிகளை தவிர பெரும் பான்மையான எதிர்க்கட்சிகள், அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன.

குமரி மாவட்டத்திலோ, தமிழகத்திலோ மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் பல சமூக அமைப்புகளும் மத்தியில் பாஜகவின் வகுப்புவாத நடைமுறைகளை கண்டித்து பல வடிவங்களில், பல வழிகளில் கண்டன இயக்கங்களை நடத்தி வருகின்றன. இத்தகைய இயக்கங்களை பார்க்கும் போது, பரிசீலிக்கும்போது நான் உறுதியாகச் சொல்கிறேன், தமிழகத்தில் ஒருபோதும் பாஜக காலூன்ற முடியாது.

மூன்றாண்டு சாதனை என்ன?
கடந்த 26-ம் தேதியன்று மத்திய அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்தது. அன்றைய தினம் தாங்கள் செய்த சாதனைகள் என கூறிஅனைத்து நாளேடுகளிலும் பொய்யான விளம்பரங்களை செய்திருந்தார்கள். ஆனால் அதே தினத்தன்று மத்திய அரசு விலங்குவதை தடைச் சட்டத்தின் அடிப்படையில் மாடு உள்ளிட்டவிலங்குகளின் இறைச்சியை தடை செய்யக்கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு சட்டப்படி செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடையாணை அறிவித்துள்ளது. அடுத்ததாக மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருகிறது.

மாட்டிறைச்சி தடை என்பது, இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல.
விவசாயிகளுக்கு, கிராமப்புற பொருளாதாரத்துக்கு எதிரானது. ஒட்டுமொத்தமாக ஏற்றமதிக்கு எதிரானது. ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் ஒரு ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில், ‘‘மத்திய அரசு ஏற்கனவே அமலாக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்

என்றால் அந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தவிர்த்து நாட்டில் பணப்புழக்கத்திற்கு ஏற்பாடு செய்வதோடு, இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கினால்தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்’’ என கூறியுள்ளார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. அரசியல்வாதியும் அல்ல.

தாராளமய பொருளாதாரத்தை ஆதரிக்கக்கூடியவர். அவர் கூறும் சமூக நல்லிணக்கம் என்பது மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும், மத மோதல் கூடாது, வகுப்புவாதம் கூடாது, மதவெறி கூடாது. மதச்சார்பின்மையும், சமூக நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட வேண்டும், அதுதான் மக்கள் ஒற்றுமைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளம் என்பதுதான்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு கடந்த வியாழக்கிழமையன்று சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகளைக் கொல்லும் பாஜக அரசு
விவசாய சாகுபடிக்கு ஆகும் செலவைவிட ஒன்றரை மடங்கு விலை விவசாயப் பொருள்களுக்கு வழங்கப்படும் எனக்கூறித்தான் ஆட்சிக்கு வந்தார் மோடி. ஆனால் பாஜகவினர் ஆளும் மத்தியப் பிரதேசத்தில் குறைந்தபட்ச நியாயவிலை வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக தற்கொலை செய்து வந்த விவசாயிகள், இனியும் தற்கொலை செய்ய மாட்டோம் என தங்கள் கோரிக்கைகளுக்காக, பாஜக அரசுக்கு எதிராககடந்த ஒரு வார காலமாக போராடி வருகின்றனர். இதையெல்லாம் திசை திருப்பவே மாட்டிறைச்சி தடை எனும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

என்ன செய்கிறார் எடப்பாடி?
கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. ஆனால் மாநிலஅரசின் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டாமா?

சர்வசிக்சா அபியான் என்னும் அனை வருக்கும் கட்டாய கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிதி 17 ஆயிரம் கோடி ரூபாயை தர வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமரை சந்தித்து மனு அளித்துள்ளார். மோடி  தலைமையிலான  மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாயை இன்னும் தரவில்லை. இதை ஏன் பழனிசாமியோ, பன்னீர் செல்வமோ கண்டிக்கவில்லை.

மீத்தேனைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. மாட்டிறைச்சி தடை பற்றியும் கவலை இல்லை. தில்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த ஓபிஎஸ், எதிர்காலத்தில் பாஜகவுடன் உடன்பாடு வைத்துக்கொள்வோம் என கூறுகிறார். அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் பழனிசாமி, பாஜகவை யாரும் விமர்சிக்காதீர்கள் என்கிறார். தமிழகத்தில் ஓபிஎஸ் கோஷ்டியையும், பழனிசாமி கோஷ்டியையும் மிரட்டி மிரட்டி கொல்லைப் புறம் வழியாக நுழைந்துவிடலாம் என பாஜக நினைக்கிறது.

இடதுசாரிகளுக்கு குறி
கடந்த மார்ச் 19ந்தேதி மோகன் பகவத் தலைமையில் 39 சங்பரிவார அமைப்புகள் கோவையில் ஒன்றுகூடி, இந்தியாவில் சங்பரிவார அமைப்புகள் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது இடதுசாரிகள் தான் என்றும், இடதுசாரிகளை குறிவைத்து தாக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அந்த தீர்மானம் நிறைவேற்றிய பிறகுதான் மத்தியப் பிரதேச ஆர்எஸ்எஸ் தலைவர், பினராயி விஜயன் தலையைக் கொண்டு வந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவிக்கிறார். இதனையடுத்து சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தில்லிக்கு வர
அனுமதிக்க மாட்டோம் என இன்னொரு ஆர்எஸ்எஸ் தலைவர் அறிக்கை விடுகிறார்.

கடந்த 6,7 தேதிகளில் தில்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் முடிந்த பிறகு, பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூட்ட முடிவுகளை குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க நிருபர்களோடு சென்றபோது, இரண்டு பேர் ஆர்எஸ்எஸ் வாழ்க, பாஜக வாழ்க என கோஷம் எழுப்பி கொண்டு சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயன்றனர்.

அங்கிருந்த தோழர்கள் அவர்களை தடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயற்சித்ததற்கும் ஆர்எஸ்எஸ்க்கும் சம்பந்தமில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் அறிக்கை விடுகிறார்.

பொய்களின் அரசியல்
கேரளாவில் வியாழக்கிழமை 8.30 மணிக்கு பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் அதற்கு முன்பே ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஒருவர் 6.30 மணிக்கு தனது முகநூலில், 8.30 மணிக்கு பாஜக அலுவலகத்தை சிபிஎம் கட்சியினர் தாக்கப் போவதாக பதிவிட்டுள்ளார்.

அந்த அலுவலகம் தாக்கப் படும் போது அங்குள்ள சிசிடிவி கேமராவும் ஆப் ஆகி விடுகிறது. சங்பரிவார அமைப்பை சேர்ந்தவர்கள் தங்கள் மீது விமர்சனம் வருகிறபோது, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்படுகிறபோது, தங்கள் அலுவலகங்களை தாங்களே தாக்கி மற்ற கட்சிகள் தாக்கியதாக பொய் சொல்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.
இப்படி பொய்களை சொல்லி அரசியல் நடத்தும் சங்பரிவார அமைப்புகளை ஒருபோதும் இந்தியதேசம் மன்னிக்காது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட அன்று இரவு, குமரிமாவட்டத்தில் மேல்புறம் கட்சி அலுவலகத்தையும், வாலிபர் சங்க நினைவு ஸ்தூபியையும் ஆர்எஸ்எஸ் -சங்பரிவார அமைப்பினர் தாக்கியுள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டம் நடத்திய போது, அதை சீர்குலைக்க வந்த சங்பரிவார அமைப்பை சார்ந்தவர் காவல் துறையின் பாதுகாப்போடு வந்துள்ளார்.

சாதாரணமாக சிலருக்கு காவல்துறை பெர்சனல் செக்யூரிட்டி அளிப்பார்கள். பெர்சனல் செக்யூரிட்டி என்பது, அந்த நபரை யாரும் தாக்காமல் பாதுகாப்பு அளிப்பதற்காக. ஆனால் இங்கே இன்னொரு போராட்டத்தை சீர்குலைப்பதற்காக, தாக்குவதற்காக செல்லும் போது பெர்சனல் செக்யூரிட்டி தரப்படுகிறது. குமரி மாவட்ட காவல்துறை மேல்புறம் கட்சி அலுவலகத்தையும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஸ்தூபியையும் தாக்கிய காவிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுலகத்தில் புகுந்து பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கலாம். எங்கள் அலுவலகங்களை தாக்கியிருக்கலாம். ஆனால் ஒரு போதும் வகுப்பு வாதத்திற்கு எதிராக, மதச்சார்பின்மைக்கான எங்கள் போராட்டத்தை
தடுக்க முடியாது.

                                                   பாஜகவை முறியடிப்போம்!!!

மதவெறி அரசியலை முறியடிப்போம்!!!            ஜனநாயகத்தை  பாதுகாப்போம்!!!

தொகுப்பு: ஜீன்பால்

Leave A Reply

%d bloggers like this: