ராய்ப்பூர்;
தேசத்தந்தை மகாத்மா காந்தியை, ‘சாமர்த்தியமான வியாபாரி’ என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருப்பதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
எல்லை மீறிய பேச்சால், மகாத்மாவை அவர் அவமானப்படுத்தி விட்டதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், பாஜக தலைவர் அமித் ஷா பேசுகையில், “எந்த ஒரு கொள்கை மற்றும் லட்சியத்தின் அடிப்படையிலும் காங்கிரஸ் கட்சி தொடங்கப்படவில்லை; நாட்டு விடுதலைப் போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ‘சிறப்பு வாகனம்’தான் காங்கிரஸ்.
அந்த அமைப்பில் மவுலானா ஆசாத், பண்டிட் மதன் மோகன் மாளவியா போன்ற இடதுசாரி மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் உட்பட பலர் இருந்தனர். பல்வேறு கொள்கைகள், சிந்தனைகள் கொண்டவர்கள் விடுதலைக்காக தங்களை காங்கிரஸில் இணைத்து கொண்டனர். அதனால்தான் நாட்டுக்கு விடுதலை கிடைத்தவுடன், காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுவது என்று முடிவெடுத்திருந்தார்; அவர் ஒரு புத்திசாலியான பனியா” என்று கூறியிருந்தார்.
பனியா என்றால் குஜராத்தியில் வியாபாரிகளையும், வணிகம் செய்யும் பிரிவினரையும் குறிக்கும் என்பதால், காந்தியை புத்திசாலியான வியாபாரி என்று அமித் ஷா கூறியதற்கு தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா தனது ட்விட்டர் பதிவில்,            “ நாட்டு விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் நாட்டை பிளவுபடுத்தவே இந்து மகா சபாவை ஒரு கருவியாக பிரிட்டீஷார் பயன்படுத்திக் கொண்டனர்; ஆனால், தற்போதும் அந்த இந்து மகா சபாவின் வேலையைத்தான் பாஜக-வினர் செய்துவருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
“அமித்ஷா தனது கருத்துக்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; தேசத்தந்தையான காந்தி குறித்து பேசும்போது மிகவும் மரியாதையுடன் குறிப்பிட வேண்டும்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தேசத் தந்தையைப் பற்றி அமித் ஷா விமர்சனம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது; அரசியலில் எல்லை மீறி விட்டார் அமித் ஷா” என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷைலேஷ் நிதின் திரிவேதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.