மதுராந்தகம்,
மதுராந்தகம் அருகே ரயிலில் அடிபட்டு கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் வியாழனன்று (ஜூன் 9)  உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம்  ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தார். அவருடன் அவரது ஒன்றரை வயது கைக்குழந்தை ஒன்றும் இறந்த நிலையில் கிடந்தது.
இது குறித்து அப்பகுதி வழியாகச் சென்னை செல்லும் ரயிலில்  சென்றவர்கள் இருவரும் இறந்து கிடப்பது குறித்து மதுராந்தகம் ரயில்நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்நிலைய மேலாளர் ரயில்வே காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
ரயில்வே காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது சடலத்தையும் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என்று தெரியவில்லை. அதேபோல் இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரமும் தெரியவில்லை. இது குறித்து செங்கல்பட்டு ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.