இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மோடி அரசு தடைவிதித்துள்ள நிலையில், இத்தடைக்கு மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக-வினரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பாஜகவுக்கு தங்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில், அக்கட்சியிலிருந்து கூட்டமாக வெளியேறி வரும் தொண்டர்கள், அடுத்தகட்டமாக, மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பாஜக அலுவலகங்களையும் இழுத்தும் மூடி வருகின்றனர்.கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் மேகலாயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சி நுகர்வு அதிகமாக உள்ளது.அவ்வாறிருக்க, மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது.
இம்மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்களையே அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் பாஜக கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு, மேகாலயா மாநில பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பெர்நார்த் மராக் கட்சியில் இருந்து விலகினார். செவ்வாய்க்கிழமையன்று பாஜக-வின் வடக்கு காரோ ஹில்லிஸ் மாவட்டத் தலைவர் பாச்சு மராக்கும், தன்னுடைய கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இவர்களில் பெர்நார்த் மராக், ஜூன் 10ஆம் தேதி மாட்டிறைச்சி விருந்துக்கு அழைப்பு விடுக்க, அதில் தானும் கலந்து கொள்ளப் போவதாக பாச்சு மராக் அறிவித்தார். “மாட்டிறைச்சி சாப்பிடுவது எங்களுடைய கலாச்சாரம்; பாஜக-வின் சித்தாந்தத்தை எங்கள் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் கூறினார்.
மேகாலயா மாநிலத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட தலைவர்களும் தொண்டர்களும் பாஜக-வுக்கு முழுக்குபோட்டுவிட்டனர். அவர்கள் மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகங்களை இழுத்து மூடினர். தற்போது, பாஜகவின் மேகாலயா மாநிலத் தலைமை அலுவலகமும் இழுத்து மூடப்பட்டுள்ளது. தங்களது தேசிய இனத்தின் பிரதான உணவே மாட்டிறைச்சி; இதற்கு தடை விதிப்பது என்பது எங்கள் இனத்தின் பண்பாட்டை அழிக்கும் செயல் என்று அவர்கள் மோடி அரசுக்கும், பாஜகவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.