சென்னை.
7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை 1.1.2016 முதல் நடைமுறைப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சென்னை வடக்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரேசன்கடைகளில் பொதுமக்களுக்கு மீண்டும் உளுத்தம்பருப்பு வழங்கவேண்டும், பணிஓய்வு பெறும் ஊழியர்கள் கவுரமாக வாழ கூடுதலாக ஓய்வு ஊதியம் வழங்கவேண்டும், கடந்த இரண்டு வருடமாக டெல்டா மாவட்ட ஊழியர்களை நிரந்தரப்படுத்தாமல் வேறு நிறுவன ஊழியர்களை பணி அமர்த்துவதை அரசு திரும்ப பெறவேண்டும், ஒருவருடமாக பதவி உயர்வு பெற்ற பட்டியல் எழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள் உரிய அலுவலகத்தில் பணிஅமர்த்தப்படவேண்டும், அனைத்து பதவிகளுக்கும் பணிமூப்பு பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கவேண்டும், பெரம்பூர் மண்டலம் உள்ளிட்ட சென்னையில் உள்ள பெரும்பாலான மண்டல உதவி ஆணையர்கள் சர்வாதிகாரப்போக்கோடு நடந்து கொள்வதை அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவிற்கு இணைச்செயலாளர் ஏ.அறிவழகன் தலைமை தாங்கினார். சம்மேளன மாநிலத்தலைவர் வி.குமார் துவக்கவுரையாற்றினார்.செயலாளர் எஸ்.லூர்துசாமி ஆண்டு அறிக்கையையும் பொருளாளர் எஸ்.நாராயணன் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு வடசென்னை மாவட்டச்செயலாளர் சி.திருவேட்டை , மாநில பொதுச்செயலாளர் இ.சண்முகவேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலப் பொருளாளர் ஆர்.புவனேஸ்வரன், நிர்வாகிகள் ஜி.சிவசங்கரன், எஸ்.தட்சிணாமூர்த்தி, பி.எஸ்.கோவர்தனன் ஆகியோர் பேசினர்.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் சென்னை வடக்கு மண்டலத் தலைவராக ஏ.அறிவழகன், செயலாளராக பி.மணிகண்டன், பொருளாளராக எஸ்.நாராயணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகவும் 6 பேர் துணைத்தலைவர்களாகவும் 6 பேர் இணைச்செயலாளர்களாகவும்  தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக கே.இளங்கோ நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.