சென்னை,
தமிழகஅளவில், பத்திரப் பதிவில், நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்படுவதற்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகச் சரிவை சந்தித்து வரும் தமிழக ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் ஏற்றத்தைச் சந்திக்கும் என மதிப்பிடப்படுகிறது. இது மட்டுமின்றி, பத்திரப் பதிவு மூலமாகக் கிடைக்கும் வருவாயும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த, 2012ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், பத்திரப் பதிவுக்கான நிலங்களின் வழிகாட்டு மதிப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டது. இது ரியல் எஸ்டேட், பத்திரப் பதிவு உள்ளிட்ட துறைகளின் வர்த்தகத்தை வெகுவாகப் பாதித்தது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. , பத்திரப் பதிவில் நிலங்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டி மதிப்பீட்டை 33% வரை குறைப்பதாக, அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதுபற்றிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பத்திரப் பதிவு கட்டணம் 4% அதிகரிக்க உள்ளது.
கடந்த ஓராண்டில், பத்திரப் பதிவு மூலமாக, ரூ.1,500 கோடிக்கும் மேலான வருவாய் இழப்பை தமிழக அரசு சந்தித்துள்ளது. தற்போதைய உத்தரவின் மூலமாக, விளைநிலங்கள், வீட்டு மனைகளின் விலை வெகுவாகக் குறையும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்வது பற்றிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.