சென்னை;
இந்தியத் தொழில்துறையைக் கடுமையாக அச்சுறுத்திவரும் மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராகப் பல்வேறு திசைகளிலிருந்தும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துவருகின்றன. ஜிஎஸ்டி யால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய சினிமாக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
ஜிஎஸ்டி வரியிலிருந்து பிரந்திய மொழித் திரைப்படங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். ஜிஎஸ்டி-யில் திரைப்படங்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பைக் கமல் எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பது பலரையும் கவனிக்கச் செய்துள்ளது.
கமலின் இந்தக் கருத்துக்கு பதிலளிப்பதாகக் கருதிக்கொண்டு அருண்ஜெட்லி இவ்வாறு கூறியிருக்கிறார்: “ஊடகங்கள் மூலமாக ஜிஎஸ்டிக்கு எதிராக அழுத்தம் தந்தாலும் பயனில்லை…”. இதற்கு பதிலாக கமல் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “இது அழுத்தம் தருவதல்ல, மாறாக, துன்பத்தில் இருக்கும் பிராந்திய சினிமாவின் கோரிக்கை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் பிராந்திய சினிமா அழிந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியிருக்கிறது.
மத்திய அரசு விதித்திருக்கும் இந்த ஜிஎஸ்டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படப்போகிறது. சினிமா என்பது சூதாட்டமல்ல… அது ஒரு கலை. இந்தத் துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவைச் சரியாகவும் தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகளும் உண்டு.
தேசிய அளவில் வெளியாகும் பாலிவுட் – இந்திப் படங்களுக்கு நிகராக இந்த ஜிஎஸ்டி வரியை மாநிலப் படங்களுக்கு விதிக்கக் கூடாது. அதேநேரத்தில், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்திய சினிமாவுக்கும் வரி விதிப்பதும் சரியல்ல.
இதனால் வேற்றுமையில் ஒற்றுமை எனும் நமது கலாச்சாரம் கடும் பாதிப்புக்குள்ளாகும். பிராந்திய மொழிப் படங்களின் வளர்ச்சியும் பின்தங்கிவிடும். இந்தியாவின் பலமே பிராந்திய மொழிப்படங்கள்தான். எனவே,சினிமா டிக்கட்டிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிடுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.
இதனை 12 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். கமலைத் தொடர்ந்து இன்னும் பல பிரபலங்களும் உரத்துப் பேசவேண்டும்… ஒரே குரலில்!
Leave a Reply
You must be logged in to post a comment.