திருவனந்தபுரம்;
மலையாளத் திரையுலகின் வேண்டுகோளை ஏற்று, கேளிக்கை வரி விதிப்பில் இருந்து திரைத்துறைக்கு விலக்களிக்க கேரள நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரவுள்ளது. இதில், திரைப்படத்துறைக்கு 28 சதவிகிதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு மிக அதிகபட்சமானது என்றும், இதனால் பிராந்திய மொழி திரைப்படங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் திரையுலகினர் தெரிவித்தனர்.

ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களோடு பிராந்திய மொழி திரைப்படங்களை ஒப்பிட முடியாது என்று கூறிய அவர்கள், இந்த வரி நிர்ணயத்தை மாற்றியமைக்க வேண்டும்; பிராந்திய மற்றும் மாநில மொழி திரைப்படங்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுததனர்.

28 சதவிகித ஜிஎஸ்டி வரிவிதிப்பால், பிராந்திய மொழித் திரையுலகம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் நடிகர் கமல்ஹாசன் அண்மையில் கூறியிருந்தார். வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருந்திருந்தார்.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு அதிகமாக உள்ளதால், மலையாளத் திரையுலகம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, கேரள அரசு மலையாளத் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை அடியோடு ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.
கேரள திரையுலகம் ரூ. 500 கோடி அளவுக்கான சந்தை வணிகத்தைக் கொண்டது.

இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கேரளத்தில் ஒரு திரைப்படத்திற்கான செலவு சராசரியாக ரூ. 4 கோடி என்ற அளவில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 130 படங்கள் அங்கு ரிலீசாகின்றன. இப்படங்களுக்கு 25 சதவிகிதம் வரை கேரள அரசு கேளிக்கை வரி வசூலித்து வந்தது.

தற்போது, திரைத்துறைக்கு மத்திய அரசு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதால், மலையாளத் திரையுலகம் மொத்தம் 53 சதவிகித வரி செலுத்த வேண்டிய நிலைமை உருவானது. அதனால், திரைப்படத் தொழில் பாதிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டது. இப்பிரச்சனை தொடர்பாக மலையாளத் திரையுலகினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது முன்னணி அரசிடம் முறையிட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, கேளிக்கை வரியிலிருந்து, மலையாளத் திரைப்படங்களுக்கு விலக்கு அளிக்க கேரள நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: