திண்டுக்கல் கோட்ட அரசு போக்குவரத்து பணிமனையில் வேலை செய்த தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் சிஐடியு தொடர்ந்த வழக்கு வெற்றி பெற்றது.
திண்டுக்கல் கோட்ட அரசு போக்குவரத்து நிர்வாகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய பஸ் பாடி கிளீனிங் செய்யும் தொழிலாளர்கள், டிக்கட் கேன்வாசர், துப்புரவு தொழிலாளர் என 116 பேர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி சிஐடியு சென்னையில் உள்ள தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இன்றைய சம்மேளனப் பொதுச் செயலாளராக உள்ள கே.ஆறுமுகநயினார் தான் அன்றைக்கு இந்த வழக்கை தொடுத்தார். இந்த வழக்கில் 116 தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்திற்கு தொழிலாளர் தீர்;ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் அன்றைக்கு நிர்வாகம் அந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகியது. தொழிலாளர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தி தொழிலாளர் நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. மீண்டும் போக்குவரத்து நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சுக்கு அடுத்தடுத்து மேல்முறையீடுகள் செய்தது. சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சும் கீழ்கோர்ட்டுக்கள் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு போக்குவரத்துக்கழகம் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமும் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு கீழ்கோர்ட் அளித்த தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும், 116 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து அரசு போக்குவரத்து நிர்வாகம் வேறு வழியின்றி தீர்ப்பை அமுலாக்க துவங்கியுள்ளது. முதல்கட்டமாக கடந்த 1.6.2017 அன்று மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து அதிகாரிகள் திண்டுக்கல் வருகை தந்து 10 பேருக்கு 25 ஆண்டுகளுக்கான பணி நிரந்தர ஆணையை வழங்கினர். இதே போல் ஒவ்வொரு வாரமும் திண்டுக்கல் கோட்டத்திற்கு மதுரை போக்குவரத்து அதிகாரிகள் வருகை தந்து பணிநிரந்தர ஆணைகளைவழங்க உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக கட்சிகள் இந்த 116 தொழிலாளர்களை கூட பணி நிரந்தரம் செய்யாமல் உச்சநீதிமன்றம் சென்றார்கள் என்றால் அந்த கட்சிகளின் தொழிலாளர் கொள்கை இப்போது அம்பலப்பட்டு போயுள்ளது என்று திண்டுக்கல் கோட்ட சிஐடியு நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் நீதிபரிபாலன நெறிமுறைகளை சிறப்பாக கையாண்டு தொழிலாளர்களுக்கான நீதியை நிலைநாட்டியுள்ளது வரவேற்கத்தக்கது என்று திண்டுக்கல் கோட்ட பொதுச் செயலாளர் ராஜாராம் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.