9 நாட்களில் 4 பெருநகரங்களை மட்டும் பார்த்துவிட்டு சீனா போன்ற ஒரு பெரிய நாட்டைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு வரமுடியாது. எனினும் சில விஷயங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன, சில உணர்வுகள் மனதில் பதிவாயின. அவற்றையே இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

பெய்ஜிங்கின் தியானென்மென் சதுக்கம் என்றதுமே மாவோ நினைவகம் சென்று பாதுகாக்கப்பட்டுள்ள அவரின் உடலை தரிசித்து அவருக்கு அஞ்சலி செலுத்தலாம் எனும் ஆசை மேலோங்கியிருந்தது. அங்குசென்றதுமே வழிகாட்டியிடம் அதைத்தான் கேட்டேன். அவர் சொன்னார்: “மாவோ உடலைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அவர் மீது கோபத்தோடு இருப்பவர்கள் உடலை சிதைத்து விடுவார்களோ என அஞ்சி அரசு அனுமதிப்பதில்லை”. வேறொரு பயணக்குழுவோடு வந்திருந்த கவிஞர் அக்னிபுத்திரனை யதேச்சையாகச் சந்தித்தபோது அவர் சொன்னது: “புனரமைப்பு வேலை நடப்பதால் அனுமதியில்லை என்று எங்கள் வழிகாட்டி சொன்னார்”.
எது உண்மை என்பதை நாங்கள் அறியோம். மொத்தத்தில் அவரும் நானும் மாவோ நினைவகத்திற்குள் செல்ல முடியவில்லை. அதன் வாசலில் நின்று ஏமாற்றத்தோடு அந்த கம்பீரமான கட்டடத்தைப் பார்த்தேன். அதன் இரு புறங்களிலும் உழைப்பாளர்களை சித்தரிக்கும் சிற்பவேலைப்பாடுகள் மிளிர்ந்தன. அவற்றின்உச்சியில் மாவோவின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. சதுக்கத்தின் மத்தியில் மாவோ நினைவகம் என்றால் மறுகோடியில் “நுழையமுடியா மாநகரம்” எனப்பட்ட சீனச் சக்கரவர்த்தியின் அரண்மனை இருந்தது. அந்தகாலத்தில் பொதுமக்களுக்கு அங்கு நுழைய அனுமதியில்லை.சக்கரவர்த்தி பார்க்க விரும்புவோர் மட்டும்தான் உள்ளே நுழைய முடியும், மீறி நுழைந்தால் தலைபோய்விடும். இப்போதோ திருவிழாகூட்டம்! உள்ளே நுழைந்து பார்த்தபோதுதான் ஏன் “மாநகரம்” என்று பெயரிட்டார்கள் என்பது புரிந்தது. நடக்க நடக்க போய்க்கொண்டே இருந்தது. அடுக்கடுக்கான ஒரே மாதிரியான மாளிகைகள் வந்து கொண்டேயிருந்தன. கால்வலி பின்னியதால் முழுவதையும் பார்க்காமல் பேருந்துக்கு திரும்பினோம். அந்த அரண்மனையின் வாசலில் மாவோவின் பெரிய உருவப்படம் இருந்தது. முடியரசு மறைந்து மக்கள் சீனக் குடியரசு மலர்ந்ததன் நினைவாக அது இருந்ததாகப்பட்டது. அரண்மனைக்குள் நுழையும் முன் அதன் முன் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டேன்.

-Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: