உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லும்முன் தலித் மக்களுக்கு சோப், ஷாம்பு மற்றும் வாசனை திரவியம் வழங்கியதைக் கண்டித்து அசாங் வான்கடே எழுதிய கவிதை.
மனு என்னை அசுத்தமாக்கினான்
உன்னுடைய ஓரவஞ்சக மனம்
என்னை சாதிப் பெயர்களாலும்
ஒடுக்கப்படுவதாலும் நாற்றமடையச் செய்கிறது.
எனது விழுப்புண்களின் நறுமணத்தால்
நான் ஒளிர்கின்றேன்
நான் ஒடுக்குமுறையினால் நாற்றமுறுகிறேனே
தவிர, உன்னுடைய மலத்தால் அல்ல…
உன்னுடைய கடவுளை (ஆதித்யநாத்) மகிழ்விப்பதற்காக
எனக்கு நீ சோப்பும் ஷாம்புவும் கொடுத்தாய்
நீ எப்போதாவது அவைகளை
சிறுபான்மையினரை வன்புணர்ச்சி செய்வேன்
சிறுபான்மையினரை கொலை செய்வேன்
என்று கொக்கரிக்கும் நாக்குகளை
சுத்தம் செய்ய பயன்படுத்தியிருக்கிறாயா?
அல்லது மனுவையும் வருணாசிரமத்தையும்
போதிக்கும் மூளைகளை சுத்தம் செய்ய
எப்போதாவது பயன்படுத்தியிருக்கிறார்களா?
உன்னுடைய சோப்பும் ஷாம்புவும்
என்னுடைய மரியாதையை குலைத்தன
நான் எனது அன்பளிப்பினால்
உங்களின் அகந்தையை அழிக்கிறேன்
எங்களுடைய பாபாசாகேபை
தமதாக்கிக் கொண்டவர்கள்
எங்களை குறுகிய காலத்திற்கு சுத்தம் செய்வதுபோல நடிக்கிறார்கள்
உங்களுடைய சோப் என் மீதான
புண்களான சாதி ஒடுக்குமுறையையும்
ஒதுக்கி வைத்தலையும்
மேலும் அதிகரிக்கவே செய்கின்றன.
உனது கருணை எனக்கு வேண்டாம்
உன்னுடைய வெறுப்பே எனக்கு வேண்டும்
என்னுடைய உரத்த கோசங்கள்
எனது எழுச்சிப் பாடல்கள்
அது எனக்கு மரியாதையையும்
சுதந்திரத்தையும் உணரச் செய்கிறது
மேலும், போராட உத்வேகம் அளிக்கிறது
என்னுடைய இரண்டு வேலை உணவுக்காக
உங்களது கழிவுகளை சுமக்கிறேன்
அவ்வாறு இல்லையெனில்
நான் இந்தக் குடியரசு நாட்டினிலே
பட்டினியுடன்தான் உறங்க வேண்டும்
உங்களுடைய எசமான் ஆதித்யநாத்
தேசத்தின் பார்வையைக் கவர
இங்கு வருகிறார்.
நாங்கள் உங்களின் கூட்டாளிகளைப் போல
உற்சாகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கிறீர்கள்
எங்களது அமைதி கலையுமேயானால்
எவை நடுக்கமுறும் தெரியுமா?
எங்களது வீடுகளை வந்து பாருங்கள்
உங்களது காவிப் போர்வையைக் காட்டிலும்
அவை சுத்தமானவை
உங்களது மனசாட்சி சுத்தமாக
இருந்தால் மட்டும் பேசுங்கள்
உங்களது இதயத்தில் நடனமாடும்
மனுவை எரித்த பிறகே புன்னகையுங்கள்
ஏனென்றால் என்னுடைய அமைதி கலையப்போகிறது
இப்போதே விடியத் துவங்கிவிட்டது
நீங்கள் திரும்பிச் செல்லுமுன்
என்னுடைய அன்பளிப்பைத் தருகிறேன்
அம்பேத்கரும் புத்தரும்தான்
என்னை சுத்தம் செய்யும் சோப்புகள்
அம்பேத்கரையும், புத்தரையும்
உணர்ந்து உங்களின்
அடிமை எண்ணத்தை சுத்தம் செய்யுங்கள்…
சாதியையும் மனு அநீதியையும் அகற்றுங்கள்
உங்களது காவியை வெண்மையாக்குங்கள்
இந்தப் பூமியிலே இரண்டு கதிரவன்கள்
இருக்க முடியாது
எங்களது கதிரவன் உங்களது கதிரவனை சாம்பலாக்கிவிடும்…                                                         கவிஞர் மற்றும் வழக்கறிஞர், புதுதில்லியில் வசிப்பவர். அம்பேத்கர், பெரியார், பூலே ஆய்வு வட்டம், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், புதுதில்லி என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.
தமிழில்:- எஸ்.சுந்தரராஜன்

Leave a Reply

You must be logged in to post a comment.