கவுகாத்தி,
அசாமில் மாயமான போர் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
அசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய்–30 ரக போர் விமானத்தில் 2 விமானிகள்  கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வழக்கம் போல் பயிற்சிக்கு புறப்பட்டனர். தேஜ்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் துபியா என்ற இடத்தில் பறந்தபோது, விமானம் திடீரென ரேடாரின் தொடர்பை இழந்தது.
மாயமான விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு ஏதும் காரணமாக தரை இறக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு விமானத்தின் பாகங்கள் சீன எல்லை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. சீன எல்லை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளன. தேஸ்பூர் பகுதியில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் இந்த வனப்பகுதி உள்ளது.  இதனால் விமானத்தில் பயணம் செய்த விமானிகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான போர் விமானம் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. 2 என்ஜின்களுடன் அதிவேகமாக பறக்கும் திறன் கொண்ட சுகோய்–30 ரக போர் விமானம் கடந்த 1990–ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது.  கடந்த 27 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த போர் விமானங்களில் இதுவரை 6 விபத்துக்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அதுவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் விபத்துகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave A Reply