திருப்பூர்,
அனைத்துப் பகுதி மக்களை ஒன்றிணைத்து விரிவான ஒன்றுபட்ட போராட்ட இயக்கத்தை தொழிலாளி வர்க்கம் உருவாக்குவதன் மூலம் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க முடியும் என்று சிஐடியு தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் கூறினார்.
திருப்பூரில் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் 8ஆவது மாநில மாநாட்டை புதன்கிழமை தொடக்கி வைத்து ஜி.சுகுமாறன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்ற அடிப்படை நோக்கத்தோடுதான் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. நம் நாட்டின் பன்மைத் தன்மையை மறுத்து ஒரே தேசம், ஒரே சட்டம் என்று மாற்றுவதற்குத்தான் நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவை கொண்டு வரப்படுகிறது எனப் பார்க்க வேண்டும். இதை எதிர்த்து முறியடிக்க தொழிலாளி வர்க்கத்தால்தான் முடியும்.
மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் பணிகளை ஆர்எஸ்எஸ் சங் பரிவார அமைப்புகள் செய்து வருகிறார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தேச நலனோடு ஒப்பிட்டுப் பேசக்கூடிய புதிய பாணியை மத்திய ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பொய்யை உண்மையாகப் பேசும் வல்லமை கொண்டவராக மோடி இருக்கிறார். தேர்தலுக்கு முன்பு வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி தலா ரூ.15 லட்சம் வீதம் வழங்குவதாக சொன்ன மோடி, மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியபோது, அதை திசை மாற்றி வங்கி கணக்கு தொடங்குவது, பணத்தை செல்லாததாக்குவது, வங்கியில் பணம் செலுத்த, எடுக்க கட்டணம் வசூலிப்பது என அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்தார். இப்போது மக்கள் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவது பற்றி பேசுவதற்குப் பதிலாக வங்கிகள் சேவைக்கு கட்டணம் விதிப்பதைப் பற்றி பேசும் நிலையை ஏற்படுத்திவிட்டார். இதை தேச நலனுக்காக செய்ததாக மோடி சொல்வதையும் நம்பக்கூடிய ஒரு கூட்டம் இருக்கிறது.
மாட்டிறைச்சி பிரச்சனை ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் கிளப்புவதில் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான சதித்திட்டம் இருக்கிறது. ஓரிரு மாடுகள் வைத்திருக்கக்கூடிய ஏழை விவசாயிகள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மாட்டுப் பண்ணைகளில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் எதிரான தாக்குதலாகும்.
இந்த கொடுமைகளில் இருந்து விடுபட தொழிற்சங்க இயக்கம்தான் உழைப்பாளி மக்களை அணிதிரட்டிப் பாதுகாக்க முடியும். தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் விரிவான ஒன்றுபட்ட இயக்கத்தை உருவாக்க வேண்டிய மிகவும் அவசியமான காலம் இது. நாம் முயற்சி எடுப்பதன் மூலம் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற முடியும்.
கடும் வறட்சியான சூழ்நிலையிலும் கூட சென்னை போராட்டத்துக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சிஐடியு அணிதிரட்ட முடிந்தது. நமது போராட்டத்துக்கு அரசு பதிலளிக்காவிட்டால் கைது, சிறைச்சாலை, எதிர்ப்பு நடவடிக்கை என எத்தகைய அடக்குமுறை வந்தாலும் அதையும் மீறி நெடிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
மாநில அரசின் அமைச்சர்கள் யாரும் மக்களோடு பேசக்கூடியவர்களாக இல்லை. ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் இதுதான் சம்பாதிப்பதற்கு சரியான நேரம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலை வலுவான போராட்டங்களைத் திட்டமிட வேண்டிய காலமாக உள்ளது.
மே தினம் போன்ற விழாக்களை ஜனரஞ்சகமான முறையில் மக்கள் விரும்பக்கூடிய விழாவாக தொழிற்சங்கங்கள் நடத்த வேண்டும். கிராமங்களில் கலை விழா, மாணவர்கள், இளைஞர்களுக்கு பேச்சு, கதை, கவிதை, ஆடல், பாடல் போட்டிகள் என நடத்துவதன் மூலம் மக்கள் பங்கேற்போடு சடங்கு சம்பிரதாயம் இல்லாமல் சிறப்பாக நடத்தலாம்.
தொழிற்சங்க இயக்கம் சமூகப்பணிகளிலும் ஈடுபட வேண்டும். இலவச மாலை நேர பயிற்சி வகுப்புகள், ஐஏஎஸ்., ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். பணியிடங்களில் இருந்து குடியிருப்பை நோக்கி நாம் செல்ல வேண்டும். மிகப்பெரும்பான்மையான பெண்கள் கட்டுமான தொழிலாளர்களாக வேலை செய்து சங்கத்தில் இருக்கின்றனர். இவர்களைப் போராளிகளாக மாற்றினால் தமிழக அரசியலை ஸ்தம்பிக்க வைக்க முடியும். இவ்வாறு ஜி.சுகுமாறன் கூறினார்.
கட்டுமான தொழிலாளர் சங்க இரு நாள் மாநாடு
திருப்பூர் பல்லடம் சாலை எம்.கே.பாஸ்கரன் நினைவரங்கில் (ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம்) புதன்கிழமை கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.சுப்பையா தலைமையில் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது.  சங்கக் கொடியை சி.சுப்பையாவும், சிஐடியு கொடியை மாவட்ட சிஐடியு துணைத் தலைவர் பி.முத்துசாமியும் ஏற்றி வைத்தனர். மாநிலம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் கே.காமராஜ் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.சிங்காரவேலு மாநாட்டு அறிக்கை சமர்ப்பித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், கேரள மாநில கட்டுமான தொழிற்சங்க செயலாளரும், நலவாரியத் வாரியத் தலைவருமான கே.வி.ஜோஸ், தெலுங்கானா மாநிலச் செயலாளர் கோத்தம் ராஜூ, கர்நாடக மாநிலச் செயலாளர் வீராசாமி, சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.