அகர்தலா, மே 22-

2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜகவிற்கான வாட்டர்லூவாக அமைந்திடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழு கூட்டம் அகர்தலாவில் நடைபெற்றது. அதில் சீத்தாராம் யெச்சூரியும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தும் கலந்து கொண்டார்கள். அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

“மாநிலத்தில் இடது முன்னணி அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக, பாஜக ஒரு “யுத்தகளம்” போன்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  இது யுத்தம் தான் என்றால், நான் அதனை எதிர்கொண்டு முறியடித்திடத் தயாராகவே இருக்கின்றோம். சட்டமன்றத்திற்கான 60 இடங்களையும் வென்றிடுவோம்.

வாட்டர்லூ :-

வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாமிலும், மணிப்பூரிலும் ஆட்சியைப் பிடித்தபிறகு, இப்போது திரிபுராவிலும் ஆட்சியைப்பிடித்திடுவோம் என்று பாஜக கூறிக்கொண்டிருக்கிறது. எப்படி பிரெஞ்சு மாமன்னன் நெப்போலியனுக்கு 1815 இல் வாட்டல்லூ போர்க்களத்தில் இறுதி தோல்வி கிடைத்ததோ, அதேபோன்று திரிபுரா சட்டமன்றத் தேர்தல்முடிவுகள் பாஜகவிற்கு அமைந்திடும்.

கோவாவிலிலும், மணிப்பூரிலும் நேர்மையற்றமுறையில் ஆட்சியைப்பிடித்த பாஜக, பஞ்சாப்பில் மிகவும் பரிதாபகரமான முறையில் படுதோல்வியடைந்த பாஜக, தாங்கள் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி பெற்றுவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. உத்தரப்பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் மக்களவைத் தேர்தலின்போது பெற்ற வாக்குகளை விட, இப்போது சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் குறைவானதாகும்.

கடந்த மூன்றாண்டு கால மோடி ஆட்சியானது அனைத்து முனைகளிலும் படுதோல்வியடைந்துள்ள அதே சமயத்தில் அதனைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் கொண்டாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். சந்திப்பின்போது கட்சியின் மாநில செயலாளர் பிஜன் தார் மற்றும் மத்தியக் குழு உறுப்பினர் கௌதம் தாஸ் உடன் இருந்தார்கள்.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.