சென்னை;
டாஸ்மாக் நிறுவனத்தில் செயல்படும் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் 17.5.2017அன்று சென்னையில் தொமுச பேரவை அலுவலகத்தில் அஇதொமுச பேரவைத் தலைவர் வே.சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆ.இராசவேல்(தொமுச), நா.பெரியசாமி(ஏஐடியுசி), கே.திருச்செல்வன்(சிஐடியு), ஆர்.மாயகிருஷ்ணன்(பா.தொ.ச), அ.தனசேகரன்(தொ.வி.மு) உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டததில் விவாதிக்கப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள் வருமாறு:
மாநில அரசின் கொள்கை முடிவினாலும், உச்சநீதிமன்ற உத்தரவினாலும் சுமார் 4300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இக்கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு முறையான தொடர்பணி வழங்கப்படவில்லை. இதனால் 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் மாற்று இடத்தில் கடைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. புதிதாக திறக்கப்படும் கடைகளுக்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் திறக்கப்பட்ட கடைகள் மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தற்போது செயல்படும் கடைகளும் சில இடங்களில் பொதுமக்கள் நடத்தும் மதுவிலக்கு போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு சமூகவிரோதிகள் சரக்குகளை கொள்ளையடிப்பதும், ஊழியர்களை தாக்குவதும் போன்ற சட்டவிரோதமான சம்பவங்களும் நடக்கின்றன. இதனால், பணியில் உள்ள கடை ஊழியர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நிறுவன சொத்துக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஏற்படும் மதுபான இழப்பிற்கு டாஸ்மாக் நிர்வாகமே பொறுப்பாகும்.திறக்கப்பட்டிருக்கும் கடைகளில் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், பெரும் தொகையாகும் விற்பனைப் பணத்தை பாதுகாப்பதிலும், தற்போதுள்ள ஊழியர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

மூடப்பட்ட கடைகளை மாற்று இடத்தில் கொண்டு செல்ல முடியாத நிலையில் ஊழியர்களை கடைப் பணி அமர்த்துவதில் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது. மூடப்பட்ட கடை ஊழியர்களுக்கு தற்காலிக பணி அமர்த்தலில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதை தவிர்த்து, பணிமூப்பு அடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் தற்காலிக பணி வழங்கிட வேண்டும்.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் ஊழியர்களின் மாற்றுப்பணி நியமனம் குறித்தான நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதின் மூலம்தான் இப்பிரச்சனைகுத் தீர்வுகாண முடியும்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் இயங்கி வந்த கடைகளை மாற்று இடத்தில் அமைக்க எடுத்து வரும் முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்புகளின் காரணமாக சாத்தியமற்ற நிலை உருவாகியுள்ளதை கருத்தில் கொண்டு மே 31க்குள் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி, பணிமூப்பு அடிப்படையில் தேவையான ஊழியர்கள், உபரி ஊழியர்கள் குறித்தான முடிவுக்கு வர வேண்டும்.

உபரி ஊழியர்களின் கல்வித் தெகுதிக்கேற்ப அரசு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள நிரந்தர பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென டாஸ்மாக் அனைத்து கூட்டு நடவடிக்கைக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நீண்டகாலமாக பணிமறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு டாஸ்மாக் நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிரந்தர மாற்றுப் பணி வழங்க வலியுறுத்தி சென்னையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 13.6.2017 அன்று சென்னையில் பணி பாதுகாப்பு கோரிக்கை மாநாடு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டு தயாரிப்பு பணிகளுக்கு திட்டமிட மண்டல அளவில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு கூட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply