—————-எஸ்.நூர்முகமது——————
முஸ்லீம்கள் சோவியத் நாட்டில் தமது மதச் சடங்குகளை தவறாமல் கடைபிடித்து வந்தனர். தம்முடைய மத கோட்பாடுகளுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தனர். அதே நேரத்தில் அரசின் சட்டங்களையும், சோசலிச நன்னெறி கோட்பாடுகளையும் வழுவாது கடைபிடித்தனர். முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய மசூதிகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் சிறிய மசூதிகளும் இருந்தன.

முஸ்லீம் மக்கள் மசூதிகளைக் கட்டிக் கொள்ளவும், வாடகைக்கு கட்டடங்களை எடுத்து மத தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். மசூதிகளை பராமரிக்க தேவையான பணத்தைத் திரட்டவும் அனுமதிக்கப்பட்டனர். மதபீடங்களின் வருமானங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. தொழுகைக்காக பல் வேறு வசதிகளை முஸ்லீம்கள் இலவசமாகப் பயன்படுத்தி வந்தனர்.அவர்கள் போக்குவரத்து சாதனங்களையும், இதர சொத்துக்களையும் வாங்க அனுமதிக்ககப்பட்டனர்.

குர் ஆனையும், இதர மத நூல்களையும் அச்சடிக்க உரிமை அளிக்கப்பட்டது. மதக்குழுக்கள் மற்றும் சமய விசுவாசிகளின நியாயமான உரிமைகள் அனைத்துக்கும் அரசாங்கம் உத்தரவாதம் அளித்து வந்தது. மதச்சடங்குகளை சர்வ சுதந்திரமாய் கடைபிடிக்கவும் முழு உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. முஸ்லீம்கள் தமது மத கோட்பாடுகளுக்கு எற்ப திருமணச் சடங்குகளையும், பிறப்பு இறப்பு சடங்குகளையும் செய்தனர்.

சோவியத் நாட்டில் இஸ்லாமிய மத வாழ்க்கைக்கும், இஸ்லாமிய குழுக்களின் நடவடிக்கைளுக்கும் நான்கு தனித்தனியான வாரியங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாரியங்களுக்கு மதத் தலைவர்களை முஸ்லீம்களே தேர்ந்தெடுத்தனர். 1976 ல் தாஷ்கண்டில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு ஒன்று நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய யேமன் நாட்டின் தலைமை முப்தி ஷேக் அகம்மது ஜபாரா சோவியத் ஒன்றியத்தில் 4 முஸ்லீம் வாரியங்கள் அமைக்கபட்டது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்று பாராட்டினார்.

இந்த முஸ்லீம் வாரியங்கள் மசூதிகளுக்கு தேவையான இமாம்களை நியமனம் செய்தன. மதர்சாக்களில் மத குருமார்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை மேற்பார்வையிட்டன. சமய ஞானத்தை மேம்படுத்திக் கொள்ளவும், மத நூல்களுக்கு விரிவுரைகளை எழுதி பிரசுரிக்கவும் அயல்நாடுகளின் பல்கலைக்கழுகங்களுக்கு மாணவர்களை அனுப்பி வைத்தன. உலமா கவுன்சில்களை இந்த வாரியங்கள் கூட்டின.

சமயம் சம்பந்தமான சர்வ தேச மாநாடுகளை நடத்தின. அயல் நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம் தூதுக் குழுக்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டன. இது மட்டுமன்றி சோவியத் அமைச்சரைவையின் கீழ் மத விவகாரங்களுக்கான கவுன்சில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. மதம் சம்பந்தப்பட்ட சட்டங்கள் கறாராக அமலாவதை மேற்பார்வையிடுதல், மத நிறுவனங்களுக்கு உதவி செய்தல் ஆகியவை இதனுடைய பிரதான பணியாகும்.

சவூதி அரேபியாவிலுள்ள புனித ஸ்தலமான மெக்கா, மதீனாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதை சோவியத் முஸ்லீம்கள் புனித கடமையாக நிறைவேற்றி வந்தனர். மத சம்பந்தமான நூல்கள், நபி பெருமானின் போதனைகள், தொழுகை குறித்த நூல்கள், முஸ்லீம் நாட்காட்டி , குர் ஆன் ஒலிப் பேழை போன்றவை பிரசுரிக்கப்பட்டன. கலீபா உஸ்மான் தொகுத்தளித்த குரான் குறித்த பிரபலமான நூல் சோசலிச புரட்சிக்குப் பின்னர் மீட்கப்பட்டு, முஸ்லீம்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதகளில் இஸ்லாமியக் கட்டடக் கலைகளும் வளர்க்கப்பட்டன. சோவியத் நாட்டில் மத சுதந்திரம் பூரணமாக இருந்தது. பண்டைய இஸ்லாமிய நினைவு சின்னங்களை முஸ்லீம்கள் தங்கள் மத நோக்கங்ளுக்காக பயன்படுத்த சோவியத் அரசாங்கம் உறுதுணையாக இருந்தது. முஸ்லீம்கள் தங்களது தொழுகைகளையம், மத கடமைகளையும் எவ்வித தடங்கலும் இல்லாமல் நிறைவேற்றுவதை சோவியத் அரசு உறுதிப்படுத்தியது. இது இஸ்லாம் உட்பட எல்லா மத மக்களுக்கும் பாரபட்சமின்றி கிடைத்த சோசலிச சோவியத் அரசின் சேவையாகும்.

Leave A Reply