———– எஸ்.நூர்முகம்மது——-
புரட்சிக்கு முந்தைய ஜார் மன்னரின் ருஷ்ய சாம்ராஜ்யம் தேசங்களின் சிறைக் கூடம் என்றே அழைக்கப்பட்டது. உலகின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பாகத்தில் பரந்து விரிந்து கிடந்த பிரதேசம் அது. நூற்றுக்கு மேற்பட்ட தேசங்களும், தேசிய இனக் குழுக்களும் இருந்தன. இம்மக்கள் அனைவரும் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் மிகக் கொடிய சுரண்டலுக்கு ஆளாகி இருந்தனர். உரிமைகள் எதுவும் இல்லை. அனேகமாக அனைவருமே எழுத்தறிவற்றவர்கள். ருஷ்ய முதலாளிகளும், ஜார் சக்கரவர்த்தியின் அதிகாரிகளும் அவர்களைச் சுரண்டிக் கொழுத்தனர்.

பின்னாளைய பிரதேசத்தில் கி.பி. 7 – 8ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாம் பரவத் துவங்கியது. அப்போது அரேபியாவில் இருந்த கலீபா அரசு மத்திய ஆசியாவையும், டிரான்ஸ்காக்கேசியாவையும் கைப்பற்றி இஸ்லாம் மதத்தை பரப்ப துவங்கியது. அரபு மொழியும், இஸ்லாம் மதமும், கலை மற்றும் கலாச்சாரமும் இப்பகுதிகளில் பரவத் துவங்கின. மேலும், இப்பகுதிகளில் இருந்த மக்களுடைய கலை மற்றும் கலாச்சாரங்களின் பல அம்சங்களை அரபுக்களும் உட்கிரகித்துக் கொண்டனர்.

கிர்கீஜியா, தாஜிக்ஸ்தான், துருக்மேனியா, அஜெர்பெய்ஜான், உஸ்பெக்கிஸ்தான், கஜாக்ஸ்தான் ஆகிய பகுதிகளிலும், ருஷ்யாவில் தாகெஸ்தான், செச்சன்- இங்குஷ், தாத்தார், பஷ்கீர், கபர்தீன்- பால்கர் பகுதிகளிலும், உஸ்பெக் பகுதியில் கார – கல்பாக் பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். கஜக்ஸ்தானில் 19ஆம் நூற்றாண்டில் தான் இஸ்லாம் பரவியது. பெரும்பாலான பகுதிகளில் சன்னி பிரிவை சார்ந்த முஸ்லிம்களும், டிரான்ஸ்காக்கேசியாவில் ஷியா பிரிவினரும், பாமீர் பகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இஸ்மெயிலி பிரிவினரும் வசித்தனர்.

ஜாரின் சர்வாதிகார ஆட்சியில் அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் உள்ளாகியிருந்த ருஷ்யா, மாமேதை லெனின் தலைமையில் நடைபெற்ற யுகப் புரட்சியால் விடுதலை பெற்றது. அனைத்து மக்களையும் ஒடுக்கு முறையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுவித்தது. அனைத்து மக்களும் சரி நிகர் சமானம் என்று லெனின் தலைமையிலான சோசலிச அரசு பிரகடனம் செய்தது. சோசலிச சோவியத் அரசு வெளியிட்ட பிரகடனத்தில் ருஷ்யாவில் வசித்து வரும் சகல மக்களுக்கும் சமத்துவம் எனப் பிரகடனம் செய்தது.

ருஷ்ய பிரதேசத்தில் வசித்து வரும் தேசிய சிறுபான்மையினரும், பல்வேறு இனக்குழுக்களும் சர்வ சுதந்திரமாய் வளர்ச்சியடைய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. சோவியத் அரசு விடுத்த வேண்டுகோளில் உங்களுடைய நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், உங்களுடைய தேசிய, கலாச்சார நிறுவனங்களும் இனி மேல் சர்வ சுதந்திரமானவை என்றும், உங்களுடைய வாழ்க்கையை எவ்வித இடையூறுகளுமின்றி சுதந்திரமாக அமைத்துக் கொள்ளுங்கள் என்றும்,அதற்கான சகல உரிமைகளும் உங்களுக்கு உண்டு என்றும் அறிவித்தது.

சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டத்தின் 52 வது விதி மனசாட்சி சுதந்திரம் அதாவது எந்த மதத்தையும் பின்பற்றவோ அல்லது பின்பற்றாதிருக்கவோ, மத வழிபாடுகளை நடத்தவோ அல்லது நாஸ்திக பிரச்சாரம் செய்யவோ சோவியத் பிரஜைகளுக்கு உத்தரவாதம் செய்தது. மத அடிப்படையில் பகைமையையோ அல்லது வெறுப்பையோ தூண்டி விடுவது தடைசெய்யப்பட்டிருந்தது. 1918, 1924, 1936, 1977 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சோவியத் அரசியல் சட்டங்கள் ஒவ்வொன்றிலும், மனசாட்சி, வழிபட சுதந்திரம், மத வழிபாடு சம்பந்தமான தெளிவான விதிகள் இருந்தன.

மத நம்பிக்கை ஒருவருடைய தனிப்பட்ட சொந்த விஷயமாகும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆண்டவனைத் வழிபட நினைப்பவர்கள் சர்வ சுதந்திரமாக தன் விருப்பம் போல் வழிபட அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களை தடை செய்யவோ, தடுக்கவோ எவருக்கும் உரிமை இல்லாமல் இருந்தது.

ஜார் மன்னர் ஆட்சி காலத்தில் ருஷ்ய சத்திய திருச்சபை தான் அரசின் மதமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. எனவே அத்திருச்சபை மட்டுமே அரசின் சகல சலுகைகளையும் அனுபவித்து வந்தது. புரட்சிக்குப் பின்னர் அனைத்து மதங்களுக்கும் பரிபூரண சமத்துவமும், சர்வ சுதந்திரமும் வழங்கப்பட்டன. இது கடைசி வரை காப்பாற்றபட்டிருந்தது.

1981இல் நடைபெற்ற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது கட்சி காங்கிரசுக்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சமர்ப்பித்த அறிக்கையில் இஸ்லாம் மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ சார்ந்திருக்கும் மக்களின் மத நம்பிக்கைகளை கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மிகவும் மதித்து போற்றுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சோவியத் நாட்டில் மத நம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும் எல்லா தேசிய இனங்களையும், சமயங்களையும் சேர்ந்த மக்கள் அனைவருமே ஒரே வித உரிமைகளைத் தான் பெற்றிருந்தனர். ஒரே மாதிரியாகத் தான் மதித்து போற்றபட்டனர்.

புரட்சிக்கு முன்னர் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வந்த பகுதிகள் பொருளாதார ரீதியிலும், கலாச்சார ரீதியிலும் மிகவும் பின்தங்கியே இருந்தன. உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் படுமோசமாகவே இருந்தது. அதனால் சோசலிச சோவியத் உருவான உடனேயே இப்பிரதேசங்கள் துரிதமாக வளர்ச்சி அடைவதற்கான வசதிகளை சோவியத் அரசு செய்து கொடுத்தது.

முதலாவது ஐந்தாண்டு காலத்தில் நாட்டின் சராசரி வளர்ச்சி வீதங்களைக் காட்டிலும் இப்பகுதிகளின் வளர்ச்சிக்கு உயர்ந்த மட்டத்தில் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டன. உதாரணமாக கஜக்ஸ்தானின் ஒட்டு மொத்த தொழில் வளர்ச்சி விகிதம், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தை விட 1.8 மடங்கும், கிர்கீஜியாவில் 2.2 மடங்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில் 15 அரசுரிமை கொண்ட குடியரசுகள் உள்ளவற்றில் ருஷ்ய சமஷ்டி குடியரசு, அஜெர்பெய்ஜான், கஜக்ஸ்தான், கிர்கீஜியா, உஸ்பெக்கிஸ்தான், தாஜிக்ஸ்தான், துருக்மேனியா ஆகிய 7 குடியரசுகளில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்தனர். இப்பகுதிகளின் வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தப்பட்டது.

அப்பகுதி மக்கள் கல்வியில் பின் தங்கி இருந்ததால் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக முஸ்லிம் பெண்களின் கல்விக்கு ஊக்கமளிக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து சகோதர பாசத்துடன் வாழ்வதை ஊக்குவிக்கும் தன்மை இருந்தது. உஸ்பெக்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இரு வெண்கலச் சிலைகள் திறக்கப்பட்டன. கருமான் வேலை பார்த்த ஷா அகமது ஷமக்முதோவ் மற்றும் அவரது மனைவி பக்ராவின் சிலைகள் தான் அவை.

உலகப் போரின் போது அனாதைகளாகி விட்ட பத்து தேசிய இனங்களைச் சார்ந்த பதிமூன்று குழந்தைகளை ஷமக்முதோவ் தம்பதி எடுத்து பாசத்துடன் வளர்த்தனர். இந்த குழந்தைகள் அனைத்தும் ஷமக்முதோவ் குடும்பத்தில் சகோதர, சகோதரிகளாய் ஒன்றி வளர்ந்தனர். சோவியத் நாட்டில் சீரிய மனித உணர்வுகளின் சின்னமாகவும், சகல மக்களிடையே நட்புறவை வளர்க்கவும் ஒரு எடுத்துக் காட்டாய் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.

Leave A Reply