உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, ஆதித்யநாத்  அரசாங்கம்  அமைந்தபிறகு, சகரன்பூர் மாவட்டத்தில் சப்பிர்பூர் கிராமத்தில் தலித்துகளின்  மீது தாக்குதல் நடந்துள்ளது, அம்மாநிலத்தில் மதவெறி – சாதி வெறி சக்திகளின் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதற்கு  அடையாளமாகும்.
புதிதாக அரசாங்கம் பொறுப்பேற்றபின்பு, முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. இறைச்சிக் கடைகள் மற்றும் கசாப்புக் கடைகள் மூடப்பட்டதானது, பல லட்சக்கணக்கான முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளின் வாழ்வாதாரங்களைப் பாதிப்புக்கு உள்ளாகின.  இதில் வெள்ளிடைமலையாகத் தெரிவதென்னவெனில், யோகி ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின், மதவெறியர்கள் மற்றும் சாதி வெறியர்களின் இத்தகு வெறித்தனமான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன என்பதாகும். 2002இல் இன்றைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால் அமைக்கப்பட்ட இந்து யுவ வாகினி எனப்படும் வன்முறையாளர்களை உள்ளடக்கியுள்ள தனியார் ராணுவத்திற்குத் தற்போது ஏராளமானவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.  இவர்கள் மாநிலம் முழுதும் இவ்வாறு சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இந்துத்துவா மதவெறி வன்முறை வெறியாட்டங்களை எவ்விதத் தடங்கலுமின்றி நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
மே 5 அன்று, சகரன்பூரில் உயர்சாதி தாகூர்கள், சிம்லானா கிராமத்தில் மகாரானா பிரதாப் என்பவரின் சிலையை நிறுவுவது தொடர்பாக ஓர் ஊர்வலம் சென்றிருக்கின்றனர். இதற்கு நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது.  இவ்வாறு ஊர்வலமாகச் சென்றவர்களில் ஒரு கும்பல் சப்பிர்பூரில் தலித்துகள் வாழும் பகுதி வழியாகச் சென்று,  ஆட்சேபகரமானமுறையில் கோஷங்களை எழுப்பிக்கொண்டும்,  அதிகமான அளவில் இசையை எழுப்பிக்கொண்டும் சென்றிருக்கின்றனர்.  சப்பிர்பூர் கிராமத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று டாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவிட தலித்துகள் முயற்சித்தார்கள் என்பதும் இதனை தாகூர்கள் ஆட்சேபித்தார்கள் என்பதும் இங்கு குறித்துக்கொள்ளப்பட வேண்டியதாகும்.   நிர்வாகம்  அந்த சிலை நிறுவப்படுவதை தடுத்துவிட்டது. இந்தப் பின்னணியில், ஆதிக்க  சாதியினர் இவ்வாறு ஊர்வலம் வந்ததை தலித்துகளும் மிகச் சரியாக ஆட்சேபித்திருக்கின்றனர். காவல்துறையினர் தலையிட்டபோது, தாகூர்கள் மற்றும் அவர்களைப் போன்ற உயர்சாதியினர் ஒன்றுசேர்ந்துகொண்டு தலித்துகளைக் கொடூரமானமுறையில் தாக்கி இருக்கின்றனர்.
இவர்களின் தீக்கிரை தாக்குதல்கள் காரணமாக, 65 வீடுகள், விவசாய உபகரணங்கள், கால்நடைத் தீவனங்கள், மோட்டார் சைக்கிள்கள் அழிக்கப்பட்டன. ஏராளமானவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை இவர்கள் பிரதானமாகத் தாக்கியுள்ளனர். இதில் 14, 15 பேர் கடுமையான முறையில் காயங்கள் அடைந்தனர். இவ்வாறு வன்முறையாளர்கள் தங்கள் தாக்குதலைத் தொடுத்தபோது காவல்துறையினர் வெறுமனே அமைதிப் பார்வையாளர்களாக மட்டுமே இருந்திருக்கின்றனர்.
இந்து யுவ வாகினியால் இந்துத்துவா சக்திகள் வலுப்படுத்தப்பட்டிருப்பது சகரன்பூரின் சம்பவங்களிலிருந்து வெளிப்படையாகவே இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது.  அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாட வேண்டும் என்று கோரி பாஜக தலைவர்கள் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு அதனை நிர்வாகம் மறுத்ததையும் மீறி அவர்கள் ஊர்வலம் நடத்தி இருக்கிறார்கள். இதில் தலித்துகள் எவரும் அநேகமாகக் கலந்துகொள்ளவில்லை.  இந்த ஊர்வலத்தின் உண்மையான நோக்கம்,  அந்த ஊர்வலம் நடைபெற்றபோது தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஊர்வலத்தினர் முஸ்லீம்கள்  அதிகம் வாழ்ந்த பகுதிகளுக்குள் சிறுபான்மையினருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பியவண்ணம், அதன் விளைவாக அங்கே ஒரு மோதலை உருவாக்கி இருக்கின்றனர், அங்கே இருந்த முஸ்லீம்களின் வாகனங்களை எரித்திருக்கின்றனர். இவர்களின் அடாவடித்தனங்களை காவல்துறையினர் தடுத்ததால், பாஜக கும்பல் மூத்த காவல் கண்காணிப்பாளரின் இல்லத்தையும் தாக்கி இருக்கிறது.  இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் அங்கிருந்து மாற்றப்பட்டும் விட்டார். இவை அனைத்தும் யோகி அரசாங்கத்தின்  உள்நோக்கங்களைத் தெள்ளத்தெளிவாக்கி விட்டது. இவற்றின் மூலம் இந்துத்துவா வெறியர்கள் மிகவும் ஊக்கம் அடைந்திருக்கின்றனர்.
இவ்வாறு மாவட்டங்கள் பலவற்றிலும் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சப்பிர்பூர் நிகழ்வுக்கு ஒருசில தினங்களுக்கு முன்பு, புலந்சாகர் மாவட்டத்தில் சோஹி கிராமத்தைச் சேர்ந்த 54 வயது குலாம் அகமது என்பவரை யுவ வாகினியைச் சேர்ந்தவர்கள் அடித்தே கொன்றனர்.  ஓர் இந்து பெண்மணி, ஒரு முஸ்லீம் இளைஞனுடன் ஓடிப்போனதே இவர்களின் கோபத்திற்குக் காரணமாகும்.
ஆட்சியாளர்களின்  ‘இந்துத்துவா’ நோக்கங்களுடன் நிர்வாகமும் இப்போது ஒத்துப்போய்விட்டதுபோலவே தோன்றுகிறது. மே 9 அன்று, மாவட்டம் முழுதும் உள்ள தலித்துகள் மாவட்டத் தலைநகரில், சப்பிர்பூர் நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், இழப்பீடு வழங்கக் கோரியும் எதிர்ப்புப் பேரணி நடத்திட திட்டமிட்டிருந்தார்கள்.  அதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது. அவர்கள்  காந்தி மைதானத்தில்  திரண்டு, அமைதியான முறையில் பேரணியைத் தொடங்கியபோது, அவர்களைக் காவல்துறையினர் குண்டாந் தடிகளால் அடித்து நொறுக்கி இருக்கின்றனர். சில இடங்களில் கல்லெறி சம்பவங்களும் நடந்துள்ளன. தீ வைப்பு சம்பவங்களும் நடந்திருக்கின்றன. எனினும் சாதாரணமானவர்கள் எவரும் தாக்கப்படவில்லை. பின்னர், நிர்வாகம் கிராமங்களுக்குள் புகுந்து தலித்துகளைக் குறிவைத்துத் தேடத்தொடங்கி இருக்கிறது.   பாதிப்புக்குள்ளானவர்களுக்கு எவ்விதமான இழப்பீடும் அறிவிக்கப் படவில்லை.
இத்தகைய சக்திகள் தங்கள் அடாவடித்தனங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள ஊக்கப்படுத்தப்படுவார்களானால், பின் உத்தரப்பிரதேச மாநிலம் மதவெறி மற்றும் சாதிவெறி வன்முறையாளர்களின் கூடாரமாக மாறும்.
உத்தரப்பிரதேச  அரசாங்கம் தன்னுடைய அடிப்படையான அரசமைப்புச் சட்டக் கடமைகளை மீறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. சப்பிர்பூர் கிராமத்தில் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் இழப்பீடு அளித்திட வேண்டும்.  தலித்துகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ‘இந்துத்துவா’ வெறியர்களின் அடாவடித்தனங்களைக் கட்டுப்படுத்திட காவல்துறையினருக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் தரப்பட வேண்டும்.
(மே 17,2017)
(தமிழில்: ச. வீரமணி)

Leave A Reply