உடுமலை, மே 18-
உடுமலை அருகே கொத்தடிமையாய் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனியன் நிறுவனத்திலிருந்து வெளியேற முயன்ற பெண் தொழிலாளர்களை ஆலை நிர்வாகத்தினர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மைவாடி என்ற இடத்தில் விக்டஸ் டையிங் என்ற பனியன் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் அருகிலுள்ள ஊர்களில் இருந்தும், வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து தங்கி வேலை செய்து வருகிறார்கள். வெளிமாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறுவனத்தின் எதிர்புறத்தில் உள்ள கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களை நிர்வாகத்தினர் கொத்தடிமை போல் மிக மோசமாக நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், இங்கு வேலை பார்த்து வந்த ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த லாவண்யா, கீதாஞ்சலி, ஆர்ஷா, மெரினா, அம்தா, சோனா என்ற ஆறு பெண்கள், தங்களுக்கு இங்கு வேலை செய்ய பிடிக்க வில்லை. அதனால் தங்களின் சொந்த மாநிலத்திற்கே செல்வதாக கூறி வியாழனன்று தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு தொழிற்சாலையிலிருந்து வெளியேற முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆலை நிர்வாகத்தினர் அப்பெண் தொழிலாளர்களை ஆலை வாயில் முன்பு வைத்துதடி மற்றும் பிவிசி பைப்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் வலி தாங்க முடியாமல் அப்பெண்கள் அருகில் உள்ள காட்டை நோக்கி ஓடிய நிலையில், சிறிதும் மனிதாபமானமின்றி ஆலை நிர்வாகத்தினர் அவர்களை துரத்தி, துரத்தி தாக்கியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தாக்கியவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் திரளவே ஆலை நிர்வாகத்தினர் மற்றும் தாக்கிய குண்டர்கள் அனைவரும் ஆலைக்குள் தப்பிச் சென்றனர். இதையடுத்து கொடூர தாக்குதலில் படுகாய மடைந்த பெண்களை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மடத்துகுளம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, பெண் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்கு தலை கேள்விபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பன்னீர் செல்வம், சிஐடியு நிர்வாகிகள் என்.எஸ். செல்லராஜ், ஆர்.வி. வடிவேல் மற்றும் கருப்புசாமி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் விசாரித்தனர். மேலும், மடத்துகுளம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களிடம் தாக்குதல் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், அங்கு இருந்த வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

மேலும், தொழிலாளர்களை கொத்தடிமை போல் நடத்தும் விக்டஸ் டையிங் (பனியன்) நிறுவனத்தை ஆய்வு செய்து அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்ப்பட்டு வரும் தொழிலாளர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பொது இடத்தில் தொழிலாளர்களை தாக்கிய நிறுவனம் மற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Leave A Reply