பொள்ளாச்சி, மே 18-
பொள்ளாச்சியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விவசாயிகள் குறைதீர்ப்பிற்கான மாதாந்திரக் கூட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பா. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஆனைமலை ஒன்றியச் செயலாளர் பட்டீஸ்வர மூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில், ஆனைமலை மற்றும் வேட்டைக்காரன் புதூர் ஒற்றியுள்ள பல பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை உடனடியாக மீட்க வேண்டும்.

மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவை உள்ளாட்சி நிர்வாகங்கள் வரன்முறை செய்யும் போது சம்பந்தப்பட்ட வீட்டுமனை உரிமையாளர்கள் ஏதேனும் புறம்போக்கு (அரசு), ஆறு மற்றும் ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து மீட்டெடுக்க வேண்டும். முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே வரன்முறை செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், ஆனைமலை ஒற்றியுள்ள கிராம மக்களின் சார்பில் காளியாபுரம், துண்டுக்கடவுபதி செல்லும் வழியில் மாட்டேகவுண்டன் கோவில் அருகே உள்ள தரைப்பாலம் மிகவும் மோசமான நிலையில் உடைந்து காணப்படுகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஆபத்தான நிலையில் உள்ள பல தரைமட்ட பாலத்தினை உயர்மட்ட பாலமாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave A Reply