புதுதில்லி;
‘முத்தலாக்’ வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இஸ்லாமிய ஆண்கள், வாய்மொழியாக மூன்று முறை ‘தலாக்’ என்று தெரிவிப்பதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை இருப்பதை எதிர்த்து, ஷாய்ரா பானு, ஆப்ரின் ரஹ்மான் உள்ளிட்ட சில பெண்களும், குரான் சுன்னத் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளன.
தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹிண்டன் பாலி நாரிமன், உதய் உமேஷ் லலித், எஸ். அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த மே 11 முதல் இவ்வழக்குகளை விசாரித்து வருகிறது.
‘தலாக்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “முத்தலாக் கடவுளாலேயே அருவருத்து ஒதுக்கப்பட்டது; அது பாலின சமத்துவத்துக்கு எதிரானது; அப்படியே மதச் சட்டங்களோ, தனிநபர் சட்டங்களோ முத்தலாக்கை அனுமதித்தாலும் அதை ஏற்க முடியாது; ஏனெனில் மதச்சட்டத்தின்படியோ, தனிநபர் சட்டத்தின்படியோ அல்லது அரசியல் சட்டத்தின்படியே கூட, ஆண் ஒருவர் தன் இஷ்டத்துக்கு பெண்ணை விவாகரத்து செய்வதை அனுமதிக்க முடியாது” என்று வாதிட்டனர்.
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “முத்தலாக் பாவகரமானது என்றே இஸ்லாம் சொல்கிறது; எனினும் அதை இஸ்லாம் அனுமதிக்கிறது; முத்தலாக் 1400 ஆண்டுகாலமாக நடைமுறையில் உள்ளது; ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கைக்கு இணையானது; அதை நீதிமன்றம் ஆராய முடியாது” என்று என்றனர்.
“ஆண்கள் மட்டுமே, தலாக் சொல்லி விவாகரத்து செய்யலாம் என முஸ்லிம் தனிநபர் சட்டம் சொல்லவில்லை; பெண்களும், திருமண உறவு பிடிக்காவிட்டால், தலாக் சொல்லி விவாகரத்து செய்யலாம்” என்றும் தலாக் முறையை நியாயப்படுத்தினர்.
‘தலாக்’ முறை வேண்டாம் என்று சொல்லும் பட்சத்தில் விவாகரத்து செய்வதற்கான மாற்று வழி என்ன? என்று கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், “முத்தலாக் முறைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதிகாரத்தை இஸ்லாமியப் பெண்களுக்கு திருமண ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே வழங்கலாமா? திருமணங்களை நடத்திவைக்கும் தலைமை காஜிகளுக்கு இந்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தலாமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தது.
“முத்தலாக் நடைமுறையை செல்லாது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அறிவித்தால் மாற்று ஏற்பாடாக, முஸ்லிம் சமூகத்தினரின் திருமணத்தையும் விவாகரத்து முறையையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறது” என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வியாழனன்று 6-வது நாளாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைத்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.